Monthly Archives: ஜூலை 2008

ஏன் இப்படி?


பெங்களூரு மற்றும் அகமதாபாத் குண்டுவெடிப்பு நிகழ்ந்தாலும் நிகழ்ந்தது. அரசியல் கட்சிகள் அறிக்கைப் போரை ஆரம்பித்து விட்டன.

பாஜக அத்வானி பொடா சட்டத்தைக் கொண்டு வர வேண்டுமென்று பேட்டி தர ஆரம்பித்து விட்டார். என்னவோ பொடா சட்டம் அமுலில் இருந்தப்போது நாட்டில் குண்டுகளே வெடிக்காத மாதிரி. எனக்கென்னவோ பொடா சட்டமிருந்தப்போது நிறைய அப்பாவி மக்கள்தான் சிரமத்துக்குள்ளாயினர் என்றுத் தோன்றுகிறது. காங்கிரஸோ நரேந்திர மோடி குஜராத் குண்டு வெடிப்பிற்கு தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என்று அறிக்கை விட்டாயிற்று. இது முழுக்க முழுக்க மாநில அரசின் தவறு/பிரச்சினை என்ற ரீதியில் ஒரு அறிக்கை. அப்பொழுது மத்திய அரசு எதற்கு? காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் இவ்வாறு நடந்திருந்தால் என்னச் சொல்வார்கள்? இதையெல்லாம் பார்க்கும் போது நல்ல ஆரோக்கியமான அரசு, ஆரோக்கியமான ஆளுங்கட்சி – எதிர்கட்சி உறவு (அப்படின்னா என்னா-ன்னு கேட்கப்படாது) இதெல்லாம் நமது நாட்டில் அமைய வாய்ப்பே இல்லையா என்ற ஏக்கம் தோன்றுகிறது. எதாவது ஒரு பிரச்சினையென்றால் அதை அடுத்தவர் மீது போடுவதை நாம் நிறுத்த மாட்டோமா? லால் பகதூர் சாஸ்திரி இரயில்வே துறை அமைச்சராக இருந்த்போது நடந்த இரயில் விபத்துக்கு பொறுப்பேற்று பதவி விலகினாராம். இது ஏனோ எனக்கு இப்போது தேவையில்லாமல் நினைவிற்கு வருகிறது.

இனி சில வாரங்களுக்கு எல்லா ரயில் நிலையங்களிலும்/முக்கிய இடங்களிலும் தீவிர பரிசோதனை நடைபெறும். நாட்கள் செல்ல செல்ல அதெல்லாம் காற்றோடுப் போய்விடும். நம் ஊரில் ஏதாவது பிரச்சினையா? சிறிது நாட்களுக்கு தீவிர கண்காணிப்பு. அப்புறம் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதைதான்.

சரி, அப்பரிசோதனையைத்தான் சரியாக செய்கிறார்களா? எங்கள் அலுவலக வளாகத்தில் நான்கு சக்கர வாகனங்கள் உள்ளே நுழையும்போது செக்யூரிட்டி-கள் ஒரு கண்ணாடி வைத்து அவ்வாகனங்களை பரிசோதனை செய்வர். எனக்கு ஒரு சந்தேகம், என்ன பரிசோதிக்கிறோம் என்று அவர்களுக்கு தெரியுமா? இல்லை சும்மா செய்கிறார்களா? ஏன் அப்பரிசோதனையை இரு சக்கர வாகனங்களிற்கு செய்வதில்லை? இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் ரொம்ப நல்லவர்களா?

Advertisements

பல நேரங்களில் பல மனிதர்கள்


சில வாரங்களுக்கு முன்பு சேலத்தில் இருசக்கர வாகனத்தில் போய்க் கொண்டிருந்தேன். அப்போது ஒரு பள்ளியைத் தாண்டி செல்ல வேண்டியதிருந்தது. அச்சமயம் பள்ளி விடும் நேரம் ஆதலால் காவலர் வாகனங்களை நிறுத்தி பள்ளி மாணாக்கர்கள் சாலையை கடக்க உதவிக் கொண்டிருந்தார். ஒரு நிமிடம் கூட ஆகியிருக்காது. அதற்குள் வாகன ஓட்டிகள் பொறுமை இழக்க ஆரம்பித்து ஹார்ன் அடிக்க ஆரம்பித்து விட்டனர். இத்தனைக்கும் சற்று தொலைவில் தான் சிக்னல், அதுலேயும் சிவப்பு விளக்கு தான் எரிந்துக் கொண்டிருந்தது. எனவே அங்கே போயும் நிற்க வேண்டியதாய் தான் இருக்கும். ஆனாலும் இப்பள்ளி மாணாக்கர்களுக்காக சிறிது நேரம் இவர்களால் ஏன் பொறுமையாய் இருக்க  முடியவில்லை? இன்னொருவரோ காவலர் நிற்கச் சொல்லியும் அவரைத் தாண்டி அவர் பாட்டுக்கு போய் விட்டார். இதுவே அவர்கள் குழந்தைகளை கூட்டிச் செல்ல வந்திருப்பார்களேயானால் இம்மாதிரி செய்பவர்களை இவர்களே எப்படித் திட்டி தீர்த்திருப்பார்கள்?

சரி, இது தான் இப்படியென்றால் மெத்த படித்தவர்கள் இருக்கும் இடத்திலும் இப்படித்தான். எங்கள் அலுவலகத்தில் அனைவரும் லிஃப்ட் உபயோகப்படுத்துவது வழக்கம். பொதுவாக லிஃப்டில் இருந்து வெளியே வருபவர்களுக்கு முதலில் வழிவிட்டு பின்னரே லிஃப்டிற்குள் போக வேண்டியவர்கள் நுழைய வேண்டும். ஆனால் பெரும்பாலான சமயம் அப்படி நடக்காது. லிஃப்ட் ஒரு தளம் வந்து நின்று லிஃப்டில் இருப்பவர்கள் வெளியே வர முடியாத அளவுக்கு வெளியே நின்றிருப்பவர்கள் வழியை மறித்துக் கொண்டி நிற்பார்கள். சில சமயம் கவலையே படாமல் அவர்கள் பாட்டிற்கு உள்ளே நுழைந்து விடுவர். இப்படிப் பட்ட பிரச்சினைகளைப் பார்த்து எங்கள் நிர்வாகம் ஒவ்வொரு லிஃப்ட் முன்பும் வைத்துள்ள அறிவிப்புத் தான் இது.

லிஃப்ட் அறிவிப்பு

லிஃப்ட் அறிவிப்பு

பேச்சிலர்களும் வீட்டுரிமையாளர்களும்


நான் கோவையில் பொறியியல் படிப்பு படித்துபோது கல்லூரி விடுதியில் தங்கி படித்ததில்லை. முதல் செமஸ்டர் மட்டும் கல்லூரி அருகே ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்தேன். பிறகு 5 செமஸ்டர்களும் என் பாலிடெக்னிக் நண்பர்களுடன் சேர்ந்து தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தேன். 5 செமஸ்டர்களில் 4 வீடுகள் மாற்றி விட்டோம்.

அப்படி கடைசி வீட்டில் நடந்த சில நிகழ்ச்சிகள்தான் இவை:

பெட்ரோல் எரியுமா?

முன்குறிப்பு:
இப்பதிவு தற்போதைய பெட்ரோல் விலையால் நுகர்வோர்களின் வயிறெரிவதைப் பற்றி அல்ல.

அப்போது நாங்கள் 7-8 நண்பர்கள் சேர்ந்து கோவை காந்திபுரம் புதுசித்தாபுதூரில் வீடு எடுத்து தங்கியிருந்தோம்.

எங்களது வீடு காந்திபுரம் அருகேயிருந்ததால் என் வகுப்புத் தோழன் ஒருவன் அவனது வண்டியை எங்கள் வீட்டில் நிறுத்திவிட்டு ஊருக்கு போய் விட்டான். ஊரிலிருந்து வரும்போது நேராக எங்கள் வீட்டிற்கு வந்து வண்டியை எடுத்துக்கொள்வதாக ஏற்பாடு.

பொதுவாக நாங்கள் குடியிருந்த வீட்டில் எப்போழுதும் ஒரு பெரிய கூட்டம் இருக்கும். அது போன்று என்னுடைய வகுப்புத் தோழர்கள் 4-5 அன்று எங்கள் வீட்டிலிருந்தார்கள். அவர்களில் ஒருத்தர் கூட அவ்வீட்டில் குடியிருந்தவர்கள் அல்ல, அதாவது அவ்வீட்டில் குடியிருந்தவர்கள் ஒருவரும் அப்போது அங்கில்லை.

என் வகுப்புத் தோழன் நிறுத்திவிட்டு போயிருந்த வண்டியிலிருந்து பெட்ரோல் கசிந்துக் கொண்டிருந்தது போலும். அதைப் பார்த்த என்னுடைய வகுப்புத் தோழர்களில் ஒருவனுக்கு திடீரென்று ஒரு சந்தேகம். பெட்ரோலைப் பற்ற வைத்தால் எரியுமா எரியாதா என்று. என்னே ஒரு ஆராய்ச்சி, அவன் அதை மற்றவர்களிடம் அதை சொல்ல அவர்களும் ஆர்வமாக பற்ற வைத்து தான் பார்ப்போமே என்று அப்பெட்ரோலைப் பற்ற வைத்து விட்டார்கள். குபீர் என்று அது பற்றி எரிய ஆரம்பித்து விட்டது. நல்ல வேளையாக அவ்வண்டிக்கு ஒன்றும் ஆகவில்லை. ஆனால் பெட்ரோல் எரிந்து வீட்டு காம்பெளண்ட் சுவரைப் பதம் பார்த்துவிட்டது.

இதையெல்லாம் கவனித்த வீட்டுரிமையாளர் வந்து அவர்களை நன்றாக காய்ச்சி எடுத்துவிட்டார். அவர் கேட்ட கேள்வி “பெட்ரோலை பற்ற வைக்கிறீர்களே, இதுதான் நீங்கள் படிக்கும் லட்சணமா?”. அதற்கு அப்புறம் தான் அவர் கவனித்து இருக்கிறார், இவ்வளவு களேபரத்திலியும் ஒரு தெரிந்த முகம் கூட காணவில்லையே என்று. அதற்கு அப்புறம் வீட்டிற்கு வந்த எங்களுக்கு தனியாக பூசை விழுந்தது தனி கதை.

வீட்டை சுலபமாக கழுவி விடுவது எப்படி?

ஒரு நாள் காலையில் எங்கள் நண்பன் குளியலறை குழாயில் ஏதோ பிரச்சினை இருந்ததை சரி செய்கிறேனென்று ஏதோ செய்து அக்குழாய் உடைந்து விட்டது. கல்லூரிக்கு செல்லும் அவசரம் மற்றும் அப்போது தண்ணீர் வராதக்காரணத்தால் அவன் அதை அப்படியே விட்டுவிட்டு போய்விட்டான். நாங்களும் இதை பெரிய விஷயமாக கருதாமல் கல்லூரிக்கு சென்று விட்டோம். அன்று பார்த்து நான் வீட்டிற்கு முதலாவதாக திரும்பினேன். வீட்டருகே வந்துப்பார்த்தால் ஒரே தண்ணீர்மயம். பக்கமே வீட்டுரிமையாளர் கோவமாக நின்றுக் கொண்டிருந்தார்.

விஷயமிதுதான். நாங்கள் கல்லூரிக்கு சென்றப்பிறகு தண்ணீர் வந்துள்ளது. வீட்டுரிமையாளரும் தண்ணீர் ஏற்ற மோட்டர் போட்டு விட்டிருக்கிறார். எங்கள் வீட்டிலிருந்த குழாய் உடைந்திருந்ததால் தண்ணீர் முழுவதும் வெளியேறி அது எங்கள் வீட்டை நன்றாக கழுவிவிட்டு பின்பு அப்படியும் அடங்காமல் வீட்டின் வெளிபுறத்தையும் கழுவிவிட்டிருக்கிறது. அது புரியாமல் வீட்டுரிமையாளர் என்னைப் பிடித்து நன்றாக திட்டிவிட்டார். நானும் வேறுவழியின்றி அதை எல்லாம் கேட்டுக் கொண்டேன். பிறகு நான் அந்த ஆத்திரத்தையெல்லாம் இத்தனைக்கும் காரணமான நண்பன் வந்தப்பிறகு அவனைத்திட்டி தீர்த்துக்கொண்டேன்.

வெள்ளித்திரையில் லொள்ளு சபா நாயகர்கள்


பெரும்பாலனவர்கள் விஜய் தொலைக்காட்சியில் வரும் லொள்ளு சபா நிகழ்ச்சியை பார்த்து ரசித்து இருப்பீர்கள். அதில் வரும் நாயகர்கள் அநியாயத்திற்கு திரைப்படத்தையும், கதாநாயகர்களையும், இயக்குநர்களையும் (ஆக மொத்தத்தில் எல்லாவற்றையும்) ஓட்டி தள்ளுவார்கள். சந்தானம், ஜீவா போன்றவர்கள் லொள்ளு சபாவில் நடித்ததின் பயனாக இப்பொழுது வெள்ளித்திரையிலும் நுழைந்து விட்டனர்.

வெள்ளித்திரையில் இவர்கள் நிலைமை என்ன? தனுஷிடம் குத்து வாங்குவதும் விஜயிடம் நன்றாக மொத்து வாங்குவதும் தான் இவர்கள் இப்பொழுது செய்கின்றனர். குருவி படத்தில் ஜீவா விஜயிடம் நன்றாக மொத்து வாங்குவதை பார்த்தவுடன் எனக்கு ஜீவா “பேக்கரி என்கிற போக்கிரி” படத்தில் செய்த ரகளைகள்தான் நியாபகம் வந்தது. எப்படி இருந்த சந்தானம், ஜீவா. நீங்கள் இப்படி ஆகிவிட்டீரே என்றும் தோன்றுகிறது.