Monthly Archives: திசெம்பர் 2008

என்னை காப்பாற்றிய என் நண்பன்


என் கல்லூரிப் பருவத்தில் நடந்த சம்பவத்தை நினைவு கூர்கிறேன். மூன்றாவது அல்லது நான்காவது ஆண்டா என்று நினைவு இல்லை. அச்சமயத்தில் கல்லூரியில் விளையாட்டுப் போட்டிகள் நடந்துக் கொண்டிருந்தன. அதில் பளுத் தூக்கும் போட்டியும் நடக்க இருந்தது. அதில் என் நண்பன் ஒருவன் பங்கேற்க பெயர் கொடுத்திருந்தான் (அவன் ஜிம் வழக்கமாக சென்று உடம்பை நன்றாக வைத்திருப்பான்).

நான் அச்சமயம் எடை மிகவும் குறைவு. ஆகையால் என் எடை பிரிவில் போட்டியிட யாரும் இருக்க மாட்டார்கள் எனவே நான் எவ்வளவு எடை தூக்கினாலும் அப்பிரிவில் வெற்றி பெற்று விடுவேன் என்று ஒரு நண்பன் (நண்பனா அவன்) உசுப்பேத்தி விடவே நானும் அப்போட்டியில் கலந்துக் கொள்ள தயாரானேன்.

முதலில் எனது நண்பன் பளுத் தூக்கும் போட்டியில் கலந்துக் கொள்ள ஆயத்தமானான். என்ன ஆயிற்றோ தெரிய வில்லை. அவன் சரியாக பளுத் தூக்காமல் தவறி ஏடாகூடமாக கீழே போட்டு விட்டான். அதனால் அவனது தோள்பட்டை பிசகி விட்டது.  உடனே அவனை மருத்துவமனை அழைத்து செல்ல வேண்டிய கட்டாயம் அப்பொழுது.

எனவே எங்கள் நண்பர்கள் பட்டாளம் அவனை ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். ஆகையால் நான் அன்று பளு தூக்க வில்லை. அனுபவம் உள்ள அவனுக்கே அன்று அக்கதி என்றால் கற்றுக்குட்டியான என் கதி என்ன ஆகி இருக்கும் என்று நினைத்து பார்த்தேன். எனவே தான் அவனை  என்னை காப்பாற்றிய நண்பன் என்று சொன்னேன். சரிதானே? 🙂

அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

Advertisements

அடுத்து என்ன இலவசமாகத் தரலாம்?


செய்தி:
தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடுவதற்காக, சர்க்கரைப் பொங்கல் தயாரிப்பதற்கான அனைத்து பொருட்களும் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும்.

இது போன்று இன்னும் என்ன என்ன நாட்களுக்கு என்ன இலவசமாகத் தரலாம் என்று ரூம் போட்டு உட்கார்ந்து யோசித்ததில் தேறியவை:

 • புது ஆண்டிற்கு(2009) மற்றும் கிரிஸ்த்மஸிற்கு கேக் செய்யத் தேவையான பொருட்களை இலவசமாகத் தரலாம்.
 • குடும்பத்தில் உள்ளவர்கள் பிறந்த நாளன்று பாயசம் செய்யத் தேவையான பொருட்களை இலவசமாகத் தரலாம்.
 • காதலர் தினமன்று காதலர்களுக்கு வாழ்த்து அட்டைகள் இவற்றை இலவசமாகத் தரலாம்.
 • தீபாவளி பண்டிகைக்கு 100 ருபாய் மதிப்புள்ள பட்டாசு, 100 ருபாய் மதிப்புள்ள இனிப்பு இலவசமாகத் தரலாம்.
 • தேர்தல் முடிந்து புது அரசு பதவி ஏற்கும் போது மக்கள் அனைவருக்கும் அல்வா செய்யத் தேவையான பொருட்களை (அல்லது அல்வாவை) இலவசமாகத் தரலாம்.
 • அக்ஷய த்ரிதை நாளன்று 0.0000001 கிராம் தங்கக் காசு இலவசமாகத் தரலாம்.
 • விநாயகர் சதுர்த்தி (அல்லது விடுமுறை நாள்) நாளன்று கொழுக்கட்டை செய்யத் தேவையான பொருட்களை இலவசமாகத் தரலாம்.
 • புனித வெள்ளியன்று கேக் செய்யத் தேவையான பொருட்களை இலவசமாகத் தரலாம்.
 • ஆயுத பூஜை நாளன்று பொறி மற்றும் இன்ன பிற பொருட்களை இலவசமாகத் தரலாம்.
 • ரம்ஜான் அன்று தேவையான பொருட்களை இலவசமாகத் தரலாம்.
 • குடியரசு நாள், சுதந்திர நாள் அன்று தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சிகளைக் காண இலவசமாக மின்சாரம் தரலாம்.

மக்களே இது போல இன்னும் என்ன என்ன இலவசமாகத் தரலாம் என்று பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

கொஞ்சம் தள்ளி உக்காருங்க சார்


பெரம்பூர் ரயில் நிலையம். சேலம் போவதற்காகக் காத்துக் கொண்டிருந்தார் ஆனந்த்.  அவசரமாக அலுவல் வேலையாய்  செல்ல வேண்டி இருந்ததால் முன்பதிவு செய்யவில்லை. அப்போது சேலம் செல்லும் ஒரு ரயில் மிகுந்தக் கூட்டத்துடன் வந்தது. முன்பதிவு செய்யப்படாத ஒருப்பெட்டியில் முண்டியடித்து ஏறி உட்கார இடம் தேடினார். எங்கேயும் உட்கார இடம் இல்லை.

மெல்ல நகர்ந்து நான்கு பேர் உட்கார்ந்து இருந்த இருக்கை அருகேச் சென்றார். அங்கு உட்கார்ந்து இருந்த வாலிபனிடம் “கொஞ்சம் தள்ளி உக்காருங்க சார்” என்றார். அதற்கு அவன் “முன்னாடியே நாலு பேரு உக்காந்து இருக்கோம், இதிலே எங்கத் தள்ளி உக்கார?” என்று முறைத்தான். அதற்கு ஆனந்த் “சேலம் வரைக்கும் போகணும், கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோப்பா” என்று கேட்டார். அவனும் முணுமுணுத்துக் கொண்டே நகர்ந்து இடம் கொடுத்தான். ஆனந்தும் உட்கார்ந்துக் கொண்டார்.

சில மணி நேரம் கழித்து ரயில் காட்பாடியில் நின்றது. ஆனந்த் அருகே உட்கார்ந்திருந்த இளைஞன் காட்பாடியில் இறங்கி விட்டான். அவன் இறங்கியவுடன் ஆனந்த் வசதியாக இருக்கையில் உட்கார்ந்துக் கொண்டார். காட்பாடியிலும் கூட்டம் ஏறியது. அங்கு ஏறிய ஒருவர் ஆனந்த் அமர்ந்து இருந்த இருக்கை அருகே வந்தார். அவரிடம் “கொஞ்சம் தள்ளி உக்காருங்க சார், நானும் உக்காந்துக்கறேன்” என்று கேட்டார்.

அதற்கு ஆனந்த் “இது நாலு பேரு உட்கார சீட், இதுல முன்னாடியே நாலு பேரு உக்காந்து இருக்கோம். இதுல எப்படி உங்களுக்கு இடம் கொடுக்கறது?” என்று பதிலளித்தார். காட்பாடியில் ஏறியவரோ “சார், நான் ஈரோடு வரைக்கும் போகணும். கொஞ்சம் இடம் கொடுங்களேன்” என்றுக் கெஞ்சினார். ஆனந்த் “ஈரோடு வரைக்கும் போகனும்னா சென்னை சென்ட்ரல் போய் அங்க இருந்து ஏதோ ஒரு ட்ரைன்ல உட்காந்துட்டு வர வேண்டியது தானே? ஏன் எங்க உயிரை எடுக்கறீங்க?” என்று கடுகடுத்துவிட்டு தூங்குவது போல பாவ்லா செய்ய ஆரம்பித்தார். ஆனந்திடம் இருக்கை கேட்ட நபர் வேறு வழியின்றி பரிதாபமாகத் தன் பயணத்தை நின்றுக் கொண்டே தொடர்ந்தார்.

குறிப்பு 1:கதையில் வரும் சம்பவங்களும் பெயர்களும் கற்பனையே.
குறிப்பு 2: என் முதல் சிறுகதை முயற்சி. எப்படி இருக்கிறதென்று பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்(தத்)திற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்


இன்று பிறந்த நாள் காணும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்(தத்)திற்கு   பிறந்த நாள் வாழ்த்துகள்.

எல்லோரும் இதை பற்றி நிறைய பதிவுகள் போட்டு இருப்பார்கள். இருந்தாலும் நான் ரஜினி ரசிகன் என்பதால் இப்பதிவு.

வலையில் கிடைத்த சில சுவையான சம்பவங்களை அப்படியே பகிர்ந்துக் கொள்கிறேன்:

சினிமா எக்ஸ்ப்ரஸ் பத்திரிகையில் இருந்து எடுக்கப்பட்ட சுவையான சம்பவம். நன்றி சினிமா எக்ஸ்ப்ரஸ்.

பெங்களுருவில் உள்ள சாம்ராஜ்பேட்டை, மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட்… இந்தப் பகுதிகள் சென்னையிலுள்ள தி.நகர் ரங்கநாதன் தெரு போல் எந்த நேரமும் பரபரப்பாக இருக்கின்ற இடம். பஸ் ஸ்டாண்டில் கூட்டம் நிரம்பி வழிகிறது. பஸ் ஏறுவதற்கு போட்டி போட்டுக் கொண்டு அடித்துப் பிடித்து ஓடுகிறார்கள். அவரவர் வேலையிலேயே கவனமாக இருக்கிறார்கள்.

ஒரு வயதான கிழவி விறகுச் சுமையைத் தலைமீது தூக்கி வைத்துக் கொள்ள முயற்சி செய்கிறார். நான்கு பக்கமும் பார்த்து யாராவது உதவிக்கு வருகிறார்களா என்று பார்க்கிறார்.

பஸ் ஸ்டாண்ட்டின் ஓரமாக இதை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் அந்த கிழவிக்கு உதவ யாரும் முன்வராததை கவனிக்கின்றார். உடனே ஓடோடிச் சென்று விறகுக்கட்டைத் தூக்கி விடுகிறார்.

‘‘இத்தனை பேர் நடமாடுகின்ற இடத்தில் யாரும் இவருக்கு உதவவில்லையே” என்ற வருத்தத்தோடு அந்த கிழவியை பார்த்தவர் கண்களில் தன் தாய் ஞாபகம் வர, கொஞ்சம் பணத்தை எடுத்து அந்த கிழவியிடம் கொடுத்துவிட்டு நகர்கிறார்.

அந்த கிழவிக்கு ஒன்றும் புரியவில்லை. பணம் கொடுத்த நபரை அன்னாந்து பார்ப்பதற்குள் அவர் படு ஸ்பீடாக, ஸ்டைலாக நடந்து மாயமாய் மறைந்துவிட்டார்.

சுமையோடு நின்ற கிழவி, எங்கேயோ பார்த்த நபராக இவர் தெரிகிறாரே என்று நினைக்கிறார். அந்த முகத்தை மறுபடி அசை போட்டபடி நடக்கிறார். அந்தக் கிழவிக்கு அவர்தான் சூப்பர் ஸ்டார் ரஜினி என்பது தெரியாது.

இது ஏதோ ரஜினி கண்டக்டராக இருந்த காலகட்டத்தில் நடந்த சம்பவம் என்று நீங்கள் நினைத்திருந்தால் ஸாரி… புகழ் பெற்ற நடிகரான பிறகு மாறு வேடத்தில் ரஜினி பெங்களூரை சுற்றியபோது நடந்த நிகழ்ச்சி இது!

ரஜினியின் நண்பர்களான கன்னட நடிகர் துவாரகேஷ், பாலமுத்தய்யா, ஜெகதீஷ்ரெட்டி ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்த போது இந்தச் சம்பவத்தைச் சொல்லிச் சிரித்திருக்கிறார் ரஜினி.

‘‘ஏன் இப்படி மாறுவேடத்தில் போகிறீர்கள்?” என அவர்கள் ரஜனியிடம் கேட்டபோது, ‘‘யாரும் என்னை அடையாளம் தெரிஞ்சிக்காம இருந்தாதான் எந்த இடத்திற்கும் என்னால் போய் வர முடியும். முன்பு நான் பஸ் கண்டக்டரா இருந்தபோது பழகிய, பார்த்த இடங்களுக்குப் போனால் மனதுக்கு ரொம்ப ஆறுதலா இருக்கிறது. மக்களோடு நெருங்கிப் பழக வேண்டும் என்று விரும்புகிறேன். அனைவருக்கும் ஏற்றமான வாழ்க்கையை ஆண்டவன் கொடுக்கணும் என்று கடவுளிடம் நான் வேண்டாத நாள் கிடையாது” என்று பதிலளித்திருக்கிறார் ரஜினி.

இன்னொரு சுவராஸ்யமான சம்பவம்/பேட்டி: இது தமிழ்வாணன் தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கணவன் ரஜினியை மனைவி லதா ஒரு பேட்டி கண்டார், ‘சாவி’ பத்திரிக்கைக்காக. அந்தப் பேட்டியில் அவர் கேட்ட சில சுவையான கேள்விகளும் அவற்றிற்கு ரஜினிகாந்த் அளித்த பதில்களும் அவர்களது அந்நியோன்யமான குடும்ப வாழ்க்கையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன. அவை வருமாறு:

‘நீங்கள் எனக்குப் பதிலாக ஒரு சினிமா நடிகையை மணந்து கொண்டிருந்தால் உங்கள் வாழ்க்கை எப்படி அமைந்திருக்கும்?‘

‘சினிமா நடிகையும் ஒரு பெண்தானே?‘

‘படப்பிடிப்புக்குப் போய்விட்டு வீடு திரும்பும் போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது?‘

‘எனக்கு என்ன தோன்றும் என்று உனக்குத்தான் தெரியுமே! எல்லாவற்றையும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமா?‘ (‘வேண்டாம்…’ என்கிறார் லதா வெட்கத்தோடு)

‘ஏன் கல்யாணம் செய்துகொண்டோம், பிரம்மசாரியாக இருந்திருக்க கூடாதா என்று எண்ணியதுண்டா?‘

‘உன்னோடு வாழும் வாழ்க்கையை நினைக்கும் போது கல்யாணத்தை எவ்வளவு தாமதமாகச் செய்து கொண்டோம் என்று வருத்தப்படத்தான் தோன்றுகிறது.‘

‘வசதியான வீடு, மனத்திற்கேற்ற மனைவி, சினிமாப் புகழ் இந்த மூன்றையும் தவிர வேறு எதை விரும்புகிறீர்கள்?‘

‘என் தனித்தன்மையை!‘

‘என்னிடம் இதுவரை சொல்லாத இரகசியமோ மறைத்து வைத்த விஷயமோ உண்டா? இருந்தால் ஏன் சொல்லவில்லை?‘

‘என்னிடம் எந்த இரகசியமும் இல்லை என்பதைத் தெரிந்துகொண்ட நீயே இப்படி ஒரு கேள்வி கேட்கிறாயே நியாயமா?!‘

‘ஒரு மனைவியின் முதல் குழந்தை கணவன் என்கிறார்களே, அதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?‘

‘என்னைப் பொறுத்தவரை ஒப்புக்கொள்கிறேன்!‘

‘குடும்ப வாழ்க்கையில் என்னை நன்கு புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கு எது அடையாளம்?‘

‘நான் இப்பொழுது மகிழ்ச்சியாக இருப்பதுதான் அடையாளம்!‘

‘ஓரு பிரபல நடிகரின் மனைவியாகிய எனக்கு உண்மையான மகிழ்ச்சி எதில் அடங்கியிருக்கிறது?‘.

‘என்னுடைய மகிழ்ச்சியில்!‘

‘என்னைப் போலவே யாராவது டெலிபோனில் நான்தான் லதா பேசுறேன்னு சொன்னால் நீங்கள் நம்பிவிடுவீர்களா?‘

‘என் ஜில்லுவின் குரல் எனக்குத் தெரியாதா என்ன?‘

‘மனம் விட்டுச் சொல்லுங்கள், என்னிடம் உங்களுக்கு பிடிக்காதது எது?‘

‘முன்பின் தெரியாமல் எல்லோரிடமும் கருணை காட்டுவது!‘

கன்னாபின்னாச் செய்திகள் 4


எங்க கன்னாபின்னாச் செய்திகள் அடுத்த பாகம் என்று விடாமல் மடல் மேல் மடல் போட்டு விசாரித்த அன்பர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். இதோ கன்னாபின்னாச் செய்திகள் பாகம் 4.

தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை ஜப்பான் நாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்துவிட்டுச் சென்றுள்ளனர். இது ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. காரணம் ஒகேனக்கல் விவகாரத்தில் கடுமையான எதிர்ப்பை கர்நாடகா கிளப்பிக் கொண்டிருப்பதுதான். சில நாட்களுக்கு முன்பு கூட கர்நாடகத்தை சேர்ந்த சில அரசியல் கட்சியினர் ஒகேனக்கல் பகுதியில் ஆர்பாட்டம் நடத்தினர். ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தையும் அரசு ரகசியமாகவே முழுமையாக முடிக்கவும் திட்டம் இட்டுள்ளது. அதே போன்று, நீரையும் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி பகுதிகளுக்கு ரகசியமாக வழங்கப்படும் என்று நம்ப முடியாத வட்டங்கள் தெரிவிக்கின்றன.

இங்கே(மதுரை) மேயரோ, துணை மேயரோ உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் மதுரை வந்தால் எழுச்சியான வரவேற்புக் கொடுப்பதில்லை. போஸ்டர்கள் ஒட்டுவதில்லை. அப்படியிருக்க, ஸ்டாலின் மதுரை வந்தால் இவர்கள் எப்படி அவர் முன்னால் போய் நிற்கமுடியும்?” என அலுத்துக்கொண்டு முடித்தனர் தி.மு.க. கவுன்சிலர்கள். திமுக தலைவரே போஸ்டர்கள், வரவேற்பு விளம்பரங்கள் வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார். அப்படி இருக்க சில கவுன்சிலர்கள் இப்படி சொன்னால் என்ன அர்த்தம்? அப்பொழுது இந்த மாதிரியான மரியாதைகள் செய்தால் தான் அவரி(ர்களி)டம்  மக்கள் பிரச்சினையை பேச முடியுமா?  என்னக் கொடுமை சார் இது?

மதுரை தி.மு.க. கவுன்சிலர்கள் இரு குழுக்களாக இருப்பது அதிகாரிகளுக்குக் கொண்டாட்டமாக இருக்கிறது. அதனால் அழகிரி அண்ணன் கவனத்துக்கு அதிகாரிகள் எந்த விஷயத்தையும் முழுமையாகக் கொண்டு செல்வதில்லை. அதிகாரிகள் நன்றாகச் செயல்படுகிறார்கள் என அண்ணன் நினைத்துக் கொண்டிருக்கிறார். இதை பத்தி நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன்.

தீவிரவாதிகளின் தாக்குதலை நேரடி ஒளிபரப்பு மீடியாக்கள் செய்தது சரியா தவறா? சரி என்றால் Y என்றும் தவறு என்றால் N என்றும் 9000000000 என்கின்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பவும்(ஒரு செய்திக்கு 50 ரூபாய் உங்கள் மொபைலில் இருந்து கழிக்கப்படும்)

“ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் ராசா குற்றமற்றவராக இருந்தால், முதலில் பதவியில் இருந்து விலகி தன்னை விசாரணைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும்” எ‌ன்று அ.இ.அ.தி.மு.க. பொது செயலர் ஜெயலலிதா வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர். நீங்க முதலமைச்சரா இருந்தப்போது  உங்கள்  மேல் ஒரு குற்றச்சாட்டு இருந்ததே, அப்போது  ஏன் நீங்களாகவே பதவி விலகி விசாரணைக்கு உட்படுத்திக்கொள்ள வில்லை? அப்படின்னு நான் கேக்கலை,மைனாரிட்டி திமுக அரசை சேர்ந்தவங்க கேக்கறாங்க.

சென்னை, நவ. 25:நக்சல் (மாவோயிஸ்ட்) இயக்கத்திற்கு மதுரையில் உள்ள 2 கல்லூரிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கேம்பஸ் இன்டர்வியு?

இலங்கைத் தமிழர் பிரச்சனை : லண்டன் சென்றார் வைகோ! எப்போ இலங்கை போறீங்க?

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் தஞ்சையில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். இதை இலங்கையில செஞ்சி இருக்கலாமே?

சிட்டி வங்கிக்கு 306 பில்லியன் டாலர் அரசு உதவி. சிட்டி வங்கியில் கடன் வாங்கி இருக்கும் எனக்கு யாராவது  உதவ முன் வருவீர்களா என்று கேட்கிறார் நம்ம கோவிந்து.

வீட்டுக் காவலில் மசூத் அசார் : பாகிஸ்தான் நடவடிக்கை! ஏன் வீட்டிலேயே உக்காந்து அடுத்த தாக்குதலை திட்டமிடறதுக்கா?

திமுக அரசுக்கு எதிராக அதிருப்தி அலை வீசும் என்ற குருட்டு நம்பிக்கையில், அதிமுகவுடன் கூட்டணி சேர இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் போட்டி போடுகின்றன என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். அதிருப்தி அலை வீசாது, சுனாமி அதிருப்தி அலையே வீசும் அப்படின்னுல பேசிக்குறாங்க.

பந்து வீச அதிக நேரம் எடுத்தால் கடும் நடவடிக்கை; கிரிக்கெட் சங்கம் முடிவு. இப்படி சொல்லிட்டதால பந்தை எறியாதீங்க.

5 மாநில தேர்தல் முடிவு; மகிழ்ச்சியும் இல்லை வருத்தமும் இல்லை-பா.ஜனதா கருத்து. இதைதான் கீழே விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலைனு சொல்லுவாங்களா?

காங்கிரஸ் மேலிட பார்வையாளர் வீரப்ப மொய்லி:-3 மாநிலங்களில் ஆட்சியை பிடித்து இருப்பதால் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பதை யாராலும் தடுக்க முடியாது . டெல்லியில் கிடைத்த வெற்றி நாடு முழுவதும் வெற்றி பெற்றதற்கு சமம். ஆமா, யாராலும் தடுக்க முடியாது. நீங்க இப்படியே பண்ணிக்கிட்டு(அதாவது ஒண்ணுமே செய்யாம) இருங்க. வேற யாரும் ஒண்ணும் பண்ண வேண்டாம். யானை தன் தலையில தானே மண் அள்ளி போட்டுக்குமாம், அது மாதிரி ஆகிட போகுது.

சேலத்தில் 31 ஏழைகளை அகற்றி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆடியாட்கள் கைப்பற்றியதாக கூறப்படும் நிலம் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. லோக்கல் கேபிள் டிவி ஒண்ணு ஆரம்பிச்சமா அதை வச்சி நெறைய பிசினஸ் ஆரம்பிச்சமானு அப்படியே நிறைய டெவலப் பண்ணமானு இருந்திருந்தா பிரச்சனையே இருந்து இருக்காதே?

கருணாநிதி குடும்பம் – மாறன் சகோதரர்கள் குடும்பம் ஒன்று சேர்ந்தது. அப்போ சன் டிவி டாப் டென்ல வாரணம் ஆயிரம் வருமா வராதா? தமிழ்நாட்டுல மின்வெட்டு இருக்குமா இருக்காதா?

பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த முக்கியமான அவசரம் எதுவும் இல்லை என்றும் வழக்கம்போல ஏப்ரல் மாதத்தில் நடைபெறும். ஏப்ரல் 1 அன்னிக்கி வச்சா ரெம்ப பொருத்தமா இருக்கும்னு பொது மக்கள் சொல்லுறாங்க.

பின்குறிப்பு:

இந்த வண்ணத்தில் இருப்பவை நிஜச் செய்திகள். இவ்வண்ணத்தில் இருப்பவை கன்னாபின்னாச் செய்திகள்.

தீவிரவாதிகளின் தாக்குதல்களும் சில கவலைக்குரிய விஷயங்களும்


மும்பையில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலில் போராடி தமது இன்னுயிரை நீத்த நமது பாதுகாப்பு படையினருக்கும் காவலர்களுக்கும் வீர வணக்கங்கள்.

தீவிரவாதிகளின் தாக்குதலால் அரசியல்வாதிகள் சண்டை போடுகிறார்களோ இல்லையோ ஆனால் தாங்கள் ஆதரிக்கும் கட்சி ஆட்சியில் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்காது என்று பேச ஆரம்பித்து விட்டனர். எனக்கென்னவோ எல்லா கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் என்றுத் தோன்றுகிறது.

கவலைக்குரிய விஷயங்கள்:
எல்லா கமாண்டோக்களும் வருவதற்கு விமானம் இல்லாமல் அவர்கள் வரத் தாமதம். இதற்கு பிறகு அரசு நாட்டின் முக்கிய நகரங்களில் தனி கமாண்டோ படை அமைக்கப் படும் என்று அறிவித்து இருக்கிறது.

போலீஸ்காரர்களிடம் இருந்த குச்சியை (நன்றி புவனேஷ்@சுட்டபழம் ) வைத்து என்ன பண்ணுவார்கள் பாவம். மும்பை சத்ரபதி ரயில் நிலையத்தில் அவர்கள் தீவிரவாதிகளிடம் போட்ட சண்டையை பாருங்கள். லோக்கல் தாதாக்களிடம் கூட நம்மூர் போலீஸ்காரர்களை விட அதி நவீன ஆயுதங்கள் வைத்து இருப்பார்கள். எனவே காவலர்களுக்கு நவீன ஆயுதங்களை தர வேண்டும். அவர்களுக்கு கொடுக்கப்பட குண்டுத் துளைக்காத ஆடையிலும் குறைகள் இருந்தன என்று வேறு சொல்கிறார்கள்.

இத்தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களுக்கு 5 லட்சம் உதவித் தொகை ஆனால் ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ராக்கு 3 கோடி உதவித் தொகை(நன்றி இங்கிலிஷ்காரன்). தங்கம் வாங்கிக் கொடுத்தது முக்கியமா அல்லது பல நூறு உயிர்களை காத்தது முக்கியமா? அரசு இவ்வீரகளின் குடும்பத்திற்கு உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும்.

இத்தாக்குதலை நேரடி ஒளிபரப்பு செய்து கல்லாவை நிரப்ப அலைந்த மீடியாக்கள். பாதுகாப்பு படையினர் இவர்களிடம் கடுமையாக நடந்து இருக்க வேண்டும். அப்பகுதியில் யாரையும் அனுமதித்து இருக்க கூடாது.

அங்கிருந்து மீட்கப்பட்ட அனைவரிடம் தீவிர விசாரணை செய்த பின்னரே அனைவரையும் விடுவித்திருக்க வேண்டும். ஏன் மயக்க வாயுவை உபயோகிக்கவில்லை என்றும் தெரியவில்லை.

அதிரடி படையினர் தீவிரவாதிகளை குறைத்து மதிப்பிட்டு விட்டனரோ அல்லது இத்தகைய நிலைமையை கையாள இவர்களுக்கு சரியான பயிற்சி இல்லை என்றோ என்று எனக்குத் தோன்றுகிறது.

அரசு எல்லாவற்றயும் தீர பரிசீலித்து சரியான பாதையில் இனியாவது செல்ல வேண்டும். நாட்டு மக்கள் பயமில்லாமல் வாழ வழி செய்வது அரசின் கடமை.