Category Archives: அரசியல்

மக்களவை தேர்தல் 2009 – திரை விமரிசனம்


உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடிக்கும் அதிரடி ஆக்ஸன் படம் தேர்தல் 2009, டிரைலர் இதோ:

வயதானாலும் சளைக்காத கருணாநிதி மற்றும் ஜெயலலிதா போட்டிபோட்டு நடித்துள்ள படம் தான் இது. கூடவே ஜால்ரா அடிக்கும் வேடங்களில் வைகோ, திருமாவளவன், இராமதாஸ், மொத்த காங்கிரஸ் கட்சியினர், மற்றும் இன்னும் பலர் நடிக்கின்றனர்.

இவ்வளவு வருடங்களாக இலங்கை தமிழர்களா அப்படி ஒரு இனம் இருக்கின்றதா என்று கேட்டு வந்த ஜெயலலிதா தற்போது தனி ஈழம் அமைக்க பாடுபடுவேன் என்று தேர்தல் வாக்குறுதி கொடுக்கிறார்.

ஆறு மாதங்கள் மேலாக இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் மெத்தனமாக இருந்து விட்டு தேர்தல் சமயம் தீடீர் என்று ஒரு அவசர உண்ணாவிரதம் (அதை காலை சாப்பாடு சாப்பிடா விரதம் என்றும் சொல்லலாம்) இருந்து நானும் இருக்கிறேன் என்று காட்டிக்கொள்ளும் கருணாநிதி.

இப்படி பல பர்ஃபார்மன்ஸ் கேரக்டர்களில் இருவரும் பின்னி பெடலெடுத்து நடித்துள்ளனர்.

நாளைக்கு இப்படம் வெளியாகிறது. படத்தின் ரிஸல்ட் இன்னும் நான்கு நாட்களில் தெரிந்து விடும்.

படத்தின் ரிஸல்ட்டைப் பொறுத்து படத்தில் அருமையாக நடித்தவர்களுக்கு மார்க்கெட் வேல்யூ அதிகமாகும். நடிகர்களுக்குள் கூட்டணி மாறும்.

எது எப்படியோ நீங்கள் நாளை மறக்காமல் இப்படத்தை பார்த்து விடுங்கள். இல்லையென்றால் உங்கள் சீட்டை வைத்து வேறு யாராவது இப்படத்தை பார்த்து விடுவார்கள்.

நாளைக்கு வாக்கு சாவடியில் ஓட்டுப் போடுங்கள். அப்படியே இங்கேயும் ஓட்டு போடுங்களேன்.

தமிழிஷில் ஒட்டு போட இங்கு க்ளிக்குங்கள்

Advertisements

சேலம் வேட்பாளர்கள் 2


எஸ்.எம்.எஸ். மூலம் ஓட்டு சேகரிக்கும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்

சேலம் குகையை சேர்ந்தவர் ஆர்.பாலசுப்பிரமணி. இவர் சேலம் பாராளுமன்ற தொகுதியில் பகுஜன்சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட உள்ளார். இதையடுத்து இவர் கடந்த ஒரு வாரகாலமாக தொண்டர்கள், நிர்வாகிகளுடன் டிவிசன் டிவிசனாக சென்று ஓட்டு சேகரித்து வருகிறார்.

தனது கையில் யானை சின்னத்தை பிடித்து வீடு வீடாக சென்றும் பாலசுப்பரமணி ஓட்டு கேட்டு வருகிறார்.

இந்த நிலையில் வேட்பாளர் ஆர்.பாலசுப்பரமணி செல்போன் மூலம் எஸ்.எம்.எஸ். அனுப்பி ஓட்டும் சேகரித்து வருகிறார். இதில் சமூக பொருளாதாரம் மாற்றமடைய யானை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என அவர் கேட்டு வருகிறார்.

இந்த நூதன பிரசாரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளதாக பகுஜன்சமாஜ் கட்சி தொண்டர்கள் தெரிவித்தனர்.

தங்கபாலு ஆதரவுச்செய்தி:

தங்கபாலுவின் ஆதரவாளர்கள் இந்த முறையும் சேலம் தொகுதியில் அவர் தான் நிற்க வேண்டும் என்றும், தி.மு.க.வுடன் இணைந்து தீவிர பிரசாரம் செய்தால் வெற்றியை பெற்று விடலாம் என்றும் அவரிடம் தெரிவித்து வருகிறார்களாம். காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் கூறியதாவது

தங்கபாலு எம்.பி. கள்ளக்குறிச்சி தொகுதி அல்லது சேலம் தொகுதியில் போட்டியிட முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. நாங்கள் சேலம் தொகுதியில் போட்டியிட வற்புறுத்தி வருகிறோம். அவர் தனது எம்.பி. நிதியில் பல லட்சம் மதிப்பிலான பணிகளை தொடங்கி ஏழைகள் மற்றும் மலைவாழ்மக்களுக்கு உதவி செய்துள்ளார்.

தங்கபாலு எதிர்ப்புச்செய்திகள்:

தமிழக கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி சேலத்தில் சொன்னது; தமிழகம் முழுவதும் ஜனவரி 21-ந்தேதி கள் இறக்கும் போராட்டம் நடத்தினோம். அதே தேதியில் கள் இறக்க எதிர்ப்பு தெரிவித்து தங்கபாலு எம்.பி. சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார். அப்போது அவர்கள் இயக்கத்தை தடை செய்யவும் கூறி இருந்தார். இது விவசாயிகள் மற்றும் பனை தொழிலாளர்களை இழிவுபடுத்திய செயலாகும். சேலம் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ்கட்சி சார்பில் தங்கபாலு போட்டியிடுவார் என கருதுகிறோம். அப்படி அவர் போட்டியிட நிறுத்தப்பட்டால் அவரை தோற்கடிப்போம். அவரை எதிர்த்து 1000 பேரை தேர்தலில் நிறுத்துவோம்.

தமிழ்நாடு காங்., தலைவர் தங்கபாலு மீண்டும் சேலத்தில் போட்டியிடுவதற்கு கட்சியினர் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதிருப்தியாளர்கள் சிலர் தங்களது பெயரை வேட்பாளராக அறிவித்து பிரசாரம் செய்து வருகின்றனர். சேலம் கிழக்கு மாவட்ட காங்.,பொதுச் செயலரான உலகநம்பி, தங்கபாலு மாநில தலைவராக பொறுப்பேற்றபோது தன் ஆதரவாளர்களுடன் இணைந்து மொட்டை போட்டு எதிர்ப்பை காட்டினார். தேர்தலில் தங்கபாலுவுக்கு மீண்டும் சீட் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்ற தகவலால், அவர் தன்னை வேட்பாளராக அறிவித்து சுவர் விளம்பரம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்.

கொசுறுச்செய்தி:

சென்னை: தொண்டர்கள் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் கட்சித் தலைமையிடம்தான் கூற வேண்டும். மாறாக, கட்சி கட்டுப்பாட்டை மீறி நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸாருக்கு மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நன்றி: மாலைமலர், தினமலர்

தமிழிஷில் ஒட்டு போட இங்கு க்ளிக்குங்கள்

சேலம் வேட்பாளர்கள்


சேலம் பாராளுமன்ற தேர்தலுக்கு இதுவரை  தே.மு.தி.க வைத் தவிர வேற எந்த கட்சிகளும் வேட்பாளர்களை அறிவிக்க வில்லை. தற்போதைய சேலம் வேட்பளார்கள் நிலவரம் பற்றிய ஒரு சிறு பதிவு:

அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து முன்னாள் அமைச்சர் செம்மலை, மாவட்ட செயலாளர் எம்.கே. செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.ககள் நடேசன், எஸ்.கே.செல்வம், முன்னாள் அமைச்சர் விஜயலட்சுமி பழனிச்சாமியின் கணவர் பழனிச்சாமி, வக்கீல்கள் அய்யப்பமணி, அருள்புஷ்பராஜ், விவேகானந்தன், மற்றும் ஆக்ஸ்போர்டு பாபு, லலிதா செந்தில்குமார், முன்னாள் எம்.பி. கண்ணன் மகள், தொழில் அதிபர் ஏ.இ.சுகுமார், சதீஷ்குமார் உள்பட 63 பேர் மனு கொடுத்து உள்ளனர். இவர்களில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது 9-ந் தேதி தெரியவரும்.

  • கொங்குநாடு முன்னேற்ற பேரவை சார்பில் திரைப்பட தயாரிப்பாளர் அசோக்சாம்ராஜ் (இவர் அருண்குமார் மற்றும் மந்த்ரா நடித்த ப்ரியம் படத்தை தயாரித்தவர்) போட்டியிடுகிறார் என்று ஒரு செய்தி
  • கொங்கு இளைஞர் பேரவையும் சேலத்தில் வேட்பாளரை நிறுத்துகிறது (இவை இரண்டும் வெவ்வேறு கட்சிகள் தான்).
  • பாரதீய ஜனதா சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ரங்கராஜன் குமாரமங்கலத்தின் சகோதரி லலிதா குமாரமங்கலம் போட்டியிடுகிறார்.
  • தி.மு.க. கூட்டணியில் சேலம் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த கட்சியின் மாநில தலைவரும், தற்போதைய எம்.பி.யுமான தங்கபாலு மீண்டும் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • ஆர்.பாலசுப்பிரமணி சேலம் பாராளுமன்ற தொகுதியில் பகுஜன்சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட உள்ளார்.

இந்த வேட்பாளர்களை பற்றி அதிக விவரம் திரட்ட முயற்சிக்கிறேன்

தமிழிஷில் ஒட்டு போட இங்கு க்ளிக்குங்கள்

சேலம் தொகுதி


சேலம் தொகுதிப் பற்றிய இத்தகவல்கள் பலத்தளங்களிருந்து திரட்டப்பட்டுள்ளது. சேலம் எனது சொந்த ஊர் என்பதால் இப்பதிவு.

தொகுதி எல்லை மறுசீரமைப்பு நடவடிக்கையில் திருச்செங்கோடு தொகுதியில் இடம் பெற்றிருந்த எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதி சேலம் மக்களவைத் தொகுதியின் கீழ் வந்துள்ளது. ஏற்காடு(தனி) தொகுதி நீக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி தொகுதியுடன் சேர்க்கப்பட்டுள்ளது.

1952 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இத்தொகுதி பெரும்பாலும் காங்கிரஸின் கோட்டையாகவே இருந்து வந்துள்ளது. எஸ்.வி. ராமசாமி, கே. ராஜாராம், ரங்கராஜன் குமாரமங்கலம், வாழப்பாடி ராமமூர்த்தி (சுயேட்சையாக), கே.வி. தங்கபாலு, செல்வகணபதி போன்ற பிரபலங்கள் சேலம் மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இதில் எஸ்.வி.ராமசாமி மற்றும் ரங்கராஜன் குமாரமங்கலம் 3 முறை எம்.பியாகியுள்ளனர்.

கடந்த 1952, 1957, 1962, 1984, 1989, 1991 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. 1967, 1971, 1980 தேர்தல்களில் திமுகவும், 1977, 1999 தேர்தல்களில் அஇஅதிமுகவும் வெற்றி பெற்றன.

காங்கிரஸ் தலைவராக இருந்த வாழப்பாடி ராமமூர்த்தி, 1998ஆம் ஆண்டு சுயேட்சையாக வெற்றி பெற்றார். 1996ஆம் ஆண்டில் த.மா.கா. இத்தொகுதியைக் கைப்பற்றியது.

கடந்த தேர்தலில் கே.வி. தங்கபாலு (காங்கிரஸ்) 4 லட்சத்து 44 ஆயிரத்து 591 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களமிறங்கிய ராஜசேகரன் (அஇஅதிமுக) 2 லட்சத்து 68 ஆயிரத்து 964 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

இத்தொகுதியில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்: ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி.

ஓமலூர் – தமிழரசு (பாமக)
எடப்பாடி – காவேரி (பாமக)
சேலம் 1 – ரவிச்சந்திரன் (அதிமுக)
சேலம் 2 – எஸ்.ஆறுமுகம் (திமுக)
வீரபாண்டி – ராஜேந்திரன் (திமுக)

கடந்த தேர்தல் நிலவரம்

தங்கபாலு (காங்கிரஸ்) – 4,44,591.
ராஜசேகரன் (அதிமுக) – 2,68,964.
வெற்றி வித்தியாசம் – 1,75,627 வாக்குகள்.

இதுவரை எம்.பியாக இருந்தவர்கள்

1952-57 – எஸ்.வி.ராமசாமி – காங்கிரஸ்.
1957-62 – எஸ்.வி.ராமசாமி – காங்கிரஸ்.
1962-67 – எஸ்.வி.ராமசாமி – காங்கிரஸ்.
1967-71 – கே.ராஜாராம் – திமுக.
1971-77 – இ.ஆர்.கிருஷ்ணன் – திமுக.
1977-80 – ப.கண்ணன் – அதிமுக.
1980-84 – சி.பழனியப்பன் – திமுக.
1984-89 – ரங்கராஜன் குமாரமங்கலம் – காங்கிரஸ்.
1989-91 – ரங்கராஜன் குமாரமங்கலம் – காங்கிரஸ்.
1991-96 – ரங்கராஜன் குமாரமங்கலம் – காங்கிரஸ்.
1996-98 – ஆர்.தேவதாஸ் – தமாகா.
1998-99 – வாழப்பாடி ராமமூர்த்தி – சுயேச்சை.
1999-04 – டி.எம். செல்வகணபதி – அதிமுக.
2004 – கே.வி.தங்கபாலு – காங்கிரஸ்.

முதல் தேர்தல்

நடந்த ஆண்டு – 1952.
வென்றவர் – எஸ்.வி.ராமசாமி (காங்கிரஸ்).

நன்றி: http://tamil.webdunia.com மற்றும் தினமலர்

சேலம் தேர்தல் நிலவரம் பற்றி அதிக தகவல்களை தர முயற்சிக்கிறேன்.

கேள்வி பதில்கள்


ஒரு மாற்றத்துக்கு கன்னாபின்னாச் செய்திகளை கேள்வி பதில் வடிவில் வழங்குகிறேன்.

ஒவ்வொரு இந்திய குடிமகனு(ளு)க்கும் 30000 ரூபாய் கடனிருப்பதாக சமீபத்தில் படித்ததாக ஒரு நினைவு. அக்கடனை எப்படி தீர்க்கலாம்?
குவார்ட்டர் கோவிந்து, பேக்பைப்பர்புரம்

* இதற்கென்று தனியாக சேவை வரி(Service tax) தனியாக விதிக்கலாம், நம் முன்னாள் நிதியமைச்சர் ப.சி இதில் மிகத் தேர்ந்தவர். (இரண்டு-மூன்று வருடங்களுக்கு முன்பு கல்விக்கென்று ஒரு வரி விதித்தார்களே, அதை வைத்து எ ன்ன செய்தார்கள் என்று யாருக்காவதுத் தெரியுமா?
* பொறுப்பான குடிமகன்(ள்)கள் தாங்கள் கட்ட வேண்டிய வருமான வரியோடு(மற்றும் இன்ன பிற வரிகள்) இக்கடனை அடைக்க தனியாக சிறிது நிதி கொடுக்கலாம். அப்படி கொடுப்பவர்களுக்கு அரசு சில சலுகைகள் கொடுக்கலாம்.
*‌ நிறைய தொலைக்காட்சி அலைவரிசைகள் குறுஞ்செய்தி போட்டிகள் மற்றும் குறுஞ்செய்தி வாழ்த்து செய்திகள் சேவையை (????) செய்து வருகின்றன. அவை ஒவ்வொரு குறுஞ்செய்திக்கும் வசூலிக்கும் பணத்தில் ஒரு பகுதியை இந்த கடன் தீர்க்கும் நிதிக்கு கொடுக்கலாம்.

சேலம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தங்கபாலு பாராளுமன்றத்தில் ஒரு கேள்வி கூட கேக்க வில்லையாமே?
நொந்தகோபால், சேலம்

இவர் மட்டுமல்ல, தமிழகத்தைச் சார்ந்த இந்த எம்.பிக்களும் பொள்ளாச்சி கிருஷ்ணன் (மதிமுக), நாகப்பட்டனம் ஏ.கே.எஸ். விஜயன் (திமுக) மற்றும் வேணுகோபால் (திமுக) ஒரு கேள்வி கூடக் கேட்கவில்லையாம். நீங்களாவது இதைப் பற்றி ஒரு கேள்வி கேட்டீர்களே?

மதிமுகவை அழிக்க கருணாநிதி முயற்சி என்று வைகோ குற்றம் சாற்றியுள்ளாரே?
ராமகிருஷ்ணன், கம்பம்

சில வருடங்களுக்கு முன்பு பா.ம.க வை உடைக்க அ.தி.மு.க முயற்சிப்பதாக பா.ம.க வினர் குற்றம் சாற்றினர். இப்போது என்ன ஆயிற்று? இதைத்தான் நமது தத்துவ(அரசியல்) மேதை கவுண்டமணி “அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா” எ ன்று சொல்லி இருக்கிறார். இதை கண்டுக் கொள்ளாதீர்கள்.

ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் கோபிநாத் தேர்தலில் போட்டியாமே?
விஜய், பெங்களூரு

தேர்தல் பிரச்சாரத்திற்காவது சரியான நேரத்தில் வண்டி கிளம்புமா?

யாருடன் கூட்டணி என்பதைப் பற்றி ஏப்ரல் 1ஆம் தேதி கார்த்திக் அறிவிக்கிறாராமே?
சரத், தூத்துக்குடி

நோ கமெண்ட்ஸ்/ஆன்சர்ஸ்

பாஜக மதவாத கட்சி அல்ல என்று சரத்குமார் கூறியுள்ளாரே!?
கணேசன், சென்னை

தேர்தல் சமயத்தில் இம்மாதிரியான கண்டுபிடிப்புகள் நிகழ்வது சாதராணம். இருந்தாலும் சரத்குமாருக்கு இதற்காக சிறந்த கண்டுபிடிப்பிற்கான பரிசு வழங்கலாம்.

கருணாநிதியை ரம்பா சந்தித்து உள்ளார், அது குறித்து ஏதேனும் தகவல் தர முடியுமா?

மானாட மயிலாட பாகம் நான்கு பற்றி கலந்து ஆலோசித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

அதிமுகவுடன் எந்நாளும் கூட்டு சேர மாட்டோம் என்று பத்திரத்தில் எழுதித் தர தயாராக இருக்கிறேன் என்று ராமதாஸ் சில வருடங்களுக்கு முன்பு கூறினார்?

அட அதை இன்னுமா நினைவு வைத்து இருக்கிறீர்கள்?

அதிமுகவில் மரியாதை கிடைக்கவில்லை என்பதால் திமுகவில் இணைகிறேன் என்று சொல்கிறாரே ராதாரவி?
ராதிகா, சென்னை.

எது எங்கே கிடைக்கும் என்று கூடவா அவருக்கு தெரியவில்லை? இது தெரிந்துக் கொள்வதற்கு அவருக்கு இவ்வளவு வருடங்கள் ஆயிற்றா?

வருண்காந்தி?

பிரகாசமான எதிர்காலம் அவருக்கு இருக்கிறது!?

குறிப்பு:

கேள்வியும் கேள்வி கேட்டவர்களின் பெயரும் கற்பனையே!

நீங்கள் கூட கேள்விகள் கேட்கலாம். ஆனால் கண்டிப்பாக பதில்கள் வரும் என்று சொல்ல இயலாது.

பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை மிக அவசிய தேவையா?


தமிழக அரசு கன்னடக் கவிஞர் சர்வக்னரின் சிலையை சென்னையில் நிறுவ முடிவு செய்துள்ளது. பெங்களூரில் திருவள்ளுவர் சிலையை நிறுவுவதற்கு கர்நாடக முதல்வர் எட்டியூரப்பா  சம்மதித்துள்ளதாக தமிழக சட்டசபையில் நிதியமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள கன்னட பாலகா சங்க வளாகத்தில் கவிஞர் சர்வக்னர் சிலை வைப்பதற்கு சென்னை மாநகராட்சி முன்பே அனுமதி வழங்கி விட்டது. அதே போலே பல வருடங்களாக நிறுவப்படாமல் இருக்கும் திருவள்ளுவர் சிலையை நிறுவுவதற்கு கர்நாடக அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக இப்பொழுது ஒரு தகவல் பரவியுள்ளது

தமிழகத்தில் வாழும் கன்னடர்கள் மற்றும் கர்நாடகத்தில் வாழும் தமிழர்களின் நீண்டகால கனவு நிறைவேறும். மாநிலத்துக்கு மாநிலம் இதுபோன்று நல்லுறவு தழைத்து செழிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் விருப்பம் நோக்கம் என்று சொல்லி இருக்கிறாராம் அமைச்சர் அன்பழகன்.

அந்த கன்னட கவிஞர் சர்வக்னர் யாரென்றே நமக்குத் தெரியாது. அவருடைய சிலையை சென்னையில் நிறுவப் போகிறார்களாம். அதே போன்று திருவள்ளுவர் என்றால் யார் என்றே பெரும்பாலான கன்னடர்களுக்கும் தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை.இம்மாதிரி நிலையில் திருவள்ளுவர் சிலையை பெங்களூருவில் நிறுவினால் எதாவது ஒரு சின்ன பிரச்சினைக்கு கூட கண்டிப்பாக அந்த சிலையைத் தான் பதம் பார்ப்பார்கள் விஷமிகள். அதை கேள்விப்பட்டவுடன் நம்மவர்களும் சற்றும் சளைக்காதவர்களாக சர்வக்னர் சிலையை பதம் பார்ப்பார்கள். பிரச்சினை பெரியதாகும். இரண்டு மாநிலங்களிற்கு இடையே ஏகப்பட்ட பிரச்சினைகள் உள்ளப்போது இன்னொரு பிரச்சினையை புதிதாக உருவாக்க வேண்டுமா?

எதற்கு ராஜினாமா?


இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவில் உள்ள  ஜெயலலிதாவிற்கு உரிய பாதுகாப்பு அளிக்காத காரணத்திற்காக திமுக அரசும் முதல்வரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அதிமுக உறுப்பினர்கள் 11/நவம்பர் அன்று சட்டசபையில் கேட்டுள்ளனர். சபாநயாகர் அதைப் பற்றி பேச அனுமதிக்காததால் வழக்கம் போல சபை வெளிநடப்பு செய்து விட்டார்கள்(கூடவே மதிமுகவும் என்பதை சொல்ல வேண்டுமா?).

எனக்கு உள்ள சந்தேகம் என்னவென்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை இம்மாதிரி எதிர்கட்சிகள் ராஜினாமா செய்ய சொல்லி கேட்கலாமா? (மத்திய அரசால் கலைக்கப் படுவது வேறு விஷயம்).

எது எதற்குத்தான் நம் நாட்டில் ராஜினாமா செய்ய சொல்லுவார்களோத் தெரியவில்லை. இதே இவர்கள் இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டபோதோ அல்லது இலங்கை தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்படும்போதோ தமிழக அரசு அவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி அவற்றை செய்ய தவறி, அப்பொழுது ராஜினாமா செய்ய சொல்லி கேட்டால் பரவாயில்லை. ஆனால் இவர்கள் கட்சி தலைவிக்கு சரியான பாதுகாப்பு கொடுக்காத காரணத்தால் ஒரு அரசை ராஜினாமா செய்ய சொல்லி கேட்பதை என்னவென்று சொல்வது? கட்சி தலைமைக்கு இவர்கள் விசுவாசமாக நடந்துக் கொள்கிறார்கள். ஆனால் ஒட்டு போட்டு மக்களுக்கு எந்தக் கட்சியும் விசுவாசமாக நடந்துக் கொள்வதுப் போன்ற அறிகுறியேத்  தெரியவில்லை.

இதுவரைக்கும் ஆளும் காட்சியில் இருப்பவர்களை ராஜினாமா செய்யக் கோரிய எந்த எதிர் கட்சியினரும் தாங்கள் ஆளும்கட்சியாக இருந்தப்போது (எந்த காரணத்திற்காக மற்றவர்களை ராஜினாமா செய்ய சொல்லி கேட்கிறார்களோ அந்த காரணங்களுக்குக்கூட) அதே காரணங்களுக்காக ராஜினாமா செய்ததில்லை.

இன்று ஆளும் கட்சியாக இருக்கும் திமுக அரசு நாளை எதிர் (எதிரி ?) கட்சியானால் இதைப் போன்றே, அல்லது இதை விட உப்புச்சப்பில்லாத விஷயங்களுக்குக் கூட ஆளும் அரசை ராஜினாமா செய்ய சொல்லி கேட்பார்கள். திமுகவோ அதிமுகவோ கழகங்களிற்கிடையே எவ்வேறுபாடும் இல்லை. மத்திய அரசில் திமுகவை காங்கிரஸ் என்றும் அதிமுகவை பிஜேபி என்றும் எடுத்துக் கொள்ளலாம்.  நம் திராவிட கழகங்களைப் போன்றே மற்ற மாநிலங்களில் அம்மாநிலக் கட்சிகள் எப்படி  இருக்கும் என்பது என் எண்ணம்.

ஆக மொத்தத்தில் அரசியல் நடத்த வேண்டும் என்றால் லாஜிக் பார்க்க கூடாது மற்றும் செலக்டிவ் அம்னீசியா வியாதி இருக்க வேண்டும். அப்போது தான் அரசியல் கட்சி என்கின்ற கம்பெனியை திறமையாக நடத்த முடியும்.

இப்பதிவை ஆங்கிலத்தில் பார்க்க இங்கே சொடுக்கவும் (பதிவையும் ரீ-மேக் செய்ய ஆரம்பிச்சிட்டோம்ல!!!!)