Category Archives: அலசல்

பெருத்த அவமானம் – குமுறுகிறார் நடிகர் விவேக்


முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை விமான நிலையத்தில் சோதனை போட்டு அவமானப்படுத்திய அமெரிக்க விமான நிலைய அதிகாரிகளை பற்றித் தான் கூறுகிறார் விவேக். தனது பிசியான ஷெட்யூலுக்கு நடுவே கலாமை நேரில் சந்தித்து இது குறித்து பேசிவிட்டு வந்தாராம். இவ்வளவுக்கு பிறகும், இதை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் வழக்கம் போல அமைதி காக்கும் மக்கள் மீதும் விவேக்கிற்கு கடும் கோபம் இருக்கிறது.

எனக்கு ஒரு சந்தேகம். சாமி படத்தில் பாரதியார் புகைப்படத்தை சிறுவர்களிடம் காட்டி இவர் யாரென்று கேட்பார், அதற்கு அவர்களில் ஒருவன் “சந்தன கடத்தல் வீரப்பன்” என்று சொல்வான். இவர் இதை நகைச்சுவைக்காக செய்தாராம். பாரதியாரை இவர் அசிங்கப்படுத்த வில்லையா? என்னங்கையா நியாயம் இது? ஒரு வேளை நம்ம ஊர் காரங்களை நாம மட்டும் தான் அசிங்கப் படுத்தனும்னு நெனச்சி அந்த மாதிரி பண்ணிட்டாரு போல!

தமிழிஷில் ஓட்டு போட இங்கு க்ளிக்கவும்

Advertisements

தீவிரவாதிகளின் தாக்குதல்களும் சில கவலைக்குரிய விஷயங்களும்


மும்பையில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலில் போராடி தமது இன்னுயிரை நீத்த நமது பாதுகாப்பு படையினருக்கும் காவலர்களுக்கும் வீர வணக்கங்கள்.

தீவிரவாதிகளின் தாக்குதலால் அரசியல்வாதிகள் சண்டை போடுகிறார்களோ இல்லையோ ஆனால் தாங்கள் ஆதரிக்கும் கட்சி ஆட்சியில் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்காது என்று பேச ஆரம்பித்து விட்டனர். எனக்கென்னவோ எல்லா கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் என்றுத் தோன்றுகிறது.

கவலைக்குரிய விஷயங்கள்:
எல்லா கமாண்டோக்களும் வருவதற்கு விமானம் இல்லாமல் அவர்கள் வரத் தாமதம். இதற்கு பிறகு அரசு நாட்டின் முக்கிய நகரங்களில் தனி கமாண்டோ படை அமைக்கப் படும் என்று அறிவித்து இருக்கிறது.

போலீஸ்காரர்களிடம் இருந்த குச்சியை (நன்றி புவனேஷ்@சுட்டபழம் ) வைத்து என்ன பண்ணுவார்கள் பாவம். மும்பை சத்ரபதி ரயில் நிலையத்தில் அவர்கள் தீவிரவாதிகளிடம் போட்ட சண்டையை பாருங்கள். லோக்கல் தாதாக்களிடம் கூட நம்மூர் போலீஸ்காரர்களை விட அதி நவீன ஆயுதங்கள் வைத்து இருப்பார்கள். எனவே காவலர்களுக்கு நவீன ஆயுதங்களை தர வேண்டும். அவர்களுக்கு கொடுக்கப்பட குண்டுத் துளைக்காத ஆடையிலும் குறைகள் இருந்தன என்று வேறு சொல்கிறார்கள்.

இத்தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களுக்கு 5 லட்சம் உதவித் தொகை ஆனால் ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ராக்கு 3 கோடி உதவித் தொகை(நன்றி இங்கிலிஷ்காரன்). தங்கம் வாங்கிக் கொடுத்தது முக்கியமா அல்லது பல நூறு உயிர்களை காத்தது முக்கியமா? அரசு இவ்வீரகளின் குடும்பத்திற்கு உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும்.

இத்தாக்குதலை நேரடி ஒளிபரப்பு செய்து கல்லாவை நிரப்ப அலைந்த மீடியாக்கள். பாதுகாப்பு படையினர் இவர்களிடம் கடுமையாக நடந்து இருக்க வேண்டும். அப்பகுதியில் யாரையும் அனுமதித்து இருக்க கூடாது.

அங்கிருந்து மீட்கப்பட்ட அனைவரிடம் தீவிர விசாரணை செய்த பின்னரே அனைவரையும் விடுவித்திருக்க வேண்டும். ஏன் மயக்க வாயுவை உபயோகிக்கவில்லை என்றும் தெரியவில்லை.

அதிரடி படையினர் தீவிரவாதிகளை குறைத்து மதிப்பிட்டு விட்டனரோ அல்லது இத்தகைய நிலைமையை கையாள இவர்களுக்கு சரியான பயிற்சி இல்லை என்றோ என்று எனக்குத் தோன்றுகிறது.

அரசு எல்லாவற்றயும் தீர பரிசீலித்து சரியான பாதையில் இனியாவது செல்ல வேண்டும். நாட்டு மக்கள் பயமில்லாமல் வாழ வழி செய்வது அரசின் கடமை.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான நடிக/நடிகயைர் உண்ணாவிரதம்


ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான நடிக/நடிகயைர் உண்ணாவிரதத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சிக்களைப் பற்றியும் அதற்குப் பின் ஏற்பட்ட கேள்விகளைப் பற்றியும் ஒருப்பதிவு. இது லேட் தான், ஆனால் லேட்டஸ்டா என்றுத் தெரியாது 🙂

விஜயகாந்திற்கு அவர் கட்சி நிர்வாகிகள் மேடையில் இடம் பிடித்து வைத்திருந்தனராம். துண்டு போட்டுவைத்து இருந்தனரா என்றுத் தெரியவில்லை.

அஜீத் மற்றும் விஜய் சந்த்திப்போது அவர்கள் கைகுலுக்க முயன்றப்போது அதை அங்கிருந்த போட்டோகிராபர்கள் போட்டோ எடுக்கப் போட்டோ போட்டி போட்டுள்ளனர். இதைப்பார்த்து ராதாரவி ஆவேசமாகி “இது நட்சத்திர இரவு அல்ல, போய் உட்காருங்கள்” என்று சொல்லியுள்ளார். இந்த போட்டோகிராபர்களை என்னவென்றுச் சொல்வது? பாவம் அவர்களும் இந்தப் புகைப்படங்களைப்போட்டு நாலு காசு பார்க்க வேண்டாமா?

உண்ணாவிரத மேடையிலிருந்த நடிகைகளைப் பார்க்க கூட்டம் திரண்டிருந்தது. மேடையில் உள்ள நடிகைகளைப் பொதுமக்கள் வரிசையாக சென்று பார்க்க வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

ஈழத்தமிழர்களுக்கான நிவாரண நிதி நடிக/நடிகயைர்கள் சார்பாக நிதி திரட்டப்பட்டது. மொத்தம் 46 லட்சம் ரூபாய் திரட்டப்பட்டது.

இந்த நிதிக்கு ரஜினி மட்டுமே 10 லட்சம் அளித்தார். கமல் மற்றும் சிவக்குமார் ஆளுக்கு 5 லட்சம் கொடுத்தனர். லாரன்ஸ் 10 லட்சங்கள் நிதி திரட்டி அவருடையப் பணம் 2 லட்சங்களோடு 12 லட்சங்கள் கொடுத்துள்ளார். வழக்கம்போல சிலர் ரஜினி பேசியதை வைத்து அறிவி ஜீவித்தனமாக கேள்வி கேட்டுவிட்டனர். அவர் கொடுத்த 10 லட்சங்களைப் பற்றி மறந்துவிட்டனர். ஆனால் அவர் நதிநீர் இணைப்பிற்கு கொடுப்பதாகச் சொன்ன ஒரு கோடி எங்கே என்றுக் கேட்பவர்கள் இப்பொழுது கொடுத்த பணத்தை வசதியாக மறந்துவிடுவார்கள். நதிநீர் இணைப்புப் பற்றி இன்னும் எந்த செயலும் ஆரம்பிக்காதப்போது அவர் எதற்குப் பணம் இப்போதே கொடுக்க வேண்டுமென்றுப் புரியவில்லை. அப்படியே அவர் பணம் கொடுத்திருந்தாலும் அதற்கும் இவர்கள் ஏதேனும் ஒரு அர்த்தம் கற்பிப்பர். நல்லவேளை ரஜினியைப் போன்று கமல், ஜெயராம், பிரபு போன்ற சில நடிகர்கள் தாமதமாக வந்தனர். அவர் மட்டும் தாமதமாக வந்திருந்தால் தமிழினத்துரோகி என்று ஒரு பட்டமளித்திருப்பார்கள்.

மனிதச்சங்கிலி போராட்டமும் தமிழனின் தகுதியும்


சென்னையில் நடைபெறும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான மனிதச் சங்கிலி போராட்டத்தை பற்றி  புரட்சித் தமிழன் சத்யராஜ் வழக்கம் போல ஆவேசமாக பேசியிருப்பது என்னவென்றால்:

1) சென்னையில் முதல்வர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ள மனிதச் சங்கிலியில் பங்கேற்காத யாரும் தமிழ்நாட்டில் இருக்கவே தகுதியற்றவர்கள்.

2) ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ராமேஸ்வரத்தில் திரையுலகத்தினர் நடத்திய ஊர்வலத்தில் என்னால் பங்கேற்க இயலவில்லை எனது வீட்டில் முக்கிய நிகழ்ச்சி இருந்ததால் என்னால் போக இயலவில்லை.

இவர் சம்பந்தப்பட்ட துறை நடத்திய ஊர்வலத்தில் அவரது வீட்டில் முக்கியமான நிகழ்ச்சி இருந்ததால் இவரால் போக முடிய வில்லையாம். ஆனால் முதல்வர் அழைத்துள்ள மனிதச் சங்கிலியில் பங்கேற்காத எவருக்கும் தமிழகத்தில் இருக்கவே தகுதி இல்லையாம். ஹிஹி, முதல் விஷயத்தையும் இரண்டாம் விஷயத்தையும் படித்து விட்டு இப்படி யாரும் விதண்டா வாதம் செய்யக்கூடாது. அவருடைய வீட்டு பிரச்சினை தான் அவருக்கு முதலில், மற்றவை எல்லாம் அதற்குப்பின்தான். ஆனால் மற்றவர்களுக்கு அப்படி இருக்கக் கூடாது.

புரட்சித் தமிழன் வீட்டில் மனிதச் சங்கிலி நடத்தும் அன்று எந்த ஒரு முக்கியமான நிகழ்ச்சியும் நடக்காது என்றும் நம்புவோமாக. அதே போல் தமிழகத்தில் இருக்க விருப்பப்படுபவர்கள் அனைவரும் அந்நாளன்று வீட்டில் ஏதாவது முக்கியமான நிகழ்ச்சி இருந்தால் அவற்றை வேறு ஒரு நாளுக்குத் தள்ளிப் போட்டு மனிதச் சங்கிலி போராட்டத்தில் கலந்துக் கொள்ளுங்கள்..

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு குரல் கொடுப்பதில் பெரும்பாலானவர்களுக்கு மாற்றுக் கருத்து இருக்காது. ஆனால் இந்த போராட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் மட்டும் தான் ஈழத் தமிழர்களைப் பற்றி கவலைப் படுகிறார்கள் என்றும் கலந்துக் கொள்ளாதவர்கள் தமிழத்தில் இருப்பதற்கே தகுதி இல்லாதவர்கள் என்றும் சொல்லவதில் என்ன நியாயம் இருக்கிறதென்று எனக்குத் தெரியவில்லை.

சத்தியராஜ் ஒரு புரட்சித்தமிழன், எனவே அவர் ராமேஸ்வரம் போராட்டத்தில் அவரது வீட்டு நிகழ்ச்சியினால் கலந்துக் கொள்ள முடியாததால் எந்த பிரச்சினையயும் இல்லை. அதைப் பற்றி எந்த கருத்து கந்தசாமியும் கருத்தும் கூறவில்லை. இதே நிலைமையில் மற்றவர்கள் இருந்திருந்து அவர்கள் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல், சத்யராஜ் கலந்துக் கொண்டிருந்தால் அன்றைக்கு மேடை அமர்க்களப்பட்டிருக்கும். இதை எல்லாம் பார்க்கும் போது இவர்கள் எதற்காக போராடுகிறோம் என்பதை விட, யாரை குறிவைத்துத் தாக்கலாம் என்பதிலேயே கவனமாக இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

மின்சார சமாச்சாரம்


தமிழக அரசு(மின் துறை) சில நாட்களுக்கு முன்பு மின்சார விநியோகம் சம்பந்தமாக சில விஷயங்களை அறிவித்தது (அதைப் பற்றி ஒரு பதிவு போட்டு, என்னுடைய பதிவு எண்ணிக்கையை ++ செய்யவே இப்பதிவு):

1)தனியார் நடத்தும் விழாக்களுக்கு(ஆலயத் திருவிழாக்கள் நீங்கலாக) ஆடம்பர விளக்குகள் பயன்படுத்தும் பொழுது மின்சார வாரியத்திடம் இருந்து மின்சாரம் வழங்கப்படமாட்டாது.

இது கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டங்களுக்கும் பொருந்தும் என்றே நினைக்கின்றேன். இந்த திட்டத்தை சில மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்து இருக்கலாம். இதை எல்லா கட்சி கூட்டங்களுக்கும் கடுமையாக அமுல்படுத்தவேண்டும். (இதை  தே மு தி க பொதுக்கூட்டம் அறிவித்த போதே அமுல்படுத்தி இருந்தால் நிறைய மின்சாரம் சேமித்து இருக்கலாமே, ஹிஹி)

2) நகர்புறப் பகுதிகளில் வீட்டு இணைப்புகளுக்கு தினந்தோறும் குறைந்தபட்சம் 20 மணி நேரம் மின்சாரம் வழங்கப்படுவது உறுதி செய்யப்படுமாம்.

குறைந்தபட்சம் 20 மணி நேரம் என்று சொல்லி இருக்கிறார்கள் (நல்ல வேலை உஷாராக அதிகபட்சம் என்று சொல்ல வில்லை), அதை அமுல்படுத்தியும் உள்ளார்கள். பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான் (??)

3) சில நிறுவனங்களுக்கிற்கு, தொழிற்சாலைகளிற்கு, அலுவலகங்களிற்கு மின்வெட்டிலிருந்து  விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

4) வீட்டு இணைப்புகளில் அதிகமாக மின்சாரம் உபயோகிப்போருக்கு 50% அதிகமாக கட்டணம் விதிக்கப்படும்.

இதற்கு பொதுமக்களிடமிருந்து கிடைத்த ஆதரவைப் பார்த்து இவ்வுத்தரவை ரத்து செய்து விட்டார்கள்.

இதை பற்றி, விஜயகாந்த் என்ன சொல்கிறார்? இந்த மின்வெட்டு பிரச்சினையை சமாளிக்க அவரிடம்  யோசனை இருக்கிறதாம். அதை சொன்னால் கருணாநிதி அதை செயற்படுத்தி விடுவார் என்பதால் அதை இப்போது சொல்ல மாட்டாராம்.  அடப்பாவிகளா, உங்கள் யோசனையை யார் செயல்படுத்தினால் என்ன, மக்கள் பயன்பெறுவார்களே, உங்களுக்கும்(விஜயகாந்திற்கு) பெயர் கிடைக்குமே? (நன்றி சிம்பிள் சுந்தர்!)

சரி மக்களே, அதை எல்லாம் விட்டுடுவோம். தமிழத்தில் தலைவிரித்தாடும் இந்த மின்வெட்டு பிரச்னைக்கு என்ன காரணம்(ங்கள்) என்பதை யாரவது தெரியப்படுத்தலாமே?

இளையவர்களுக்கான காமன்வெல்த் விளையாட்டுகள் – இந்தியா முன்னிலை


புனேயில் இளையவர்களுக்கான மூன்றாவது காமன் வெல்த் விளையாட்டுகள் நடைபெற்று வருவது அனைவருக்கு தெரிந்ததே(என்னது தெரியாதா, அதான் இப்போது தெரிந்து விட்டேதே 🙂 ). இப்போட்டிகளில் இந்தியா பதக்கங்களில் முதலில் உள்ளது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

காமன் வெல்த் நாடுகள் என்பவை 53 நாடுகளை உள்ளடக்கியவை. இவை பெரும்பாலும் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இருந்தவை மற்றும் இங்கிலாந்தை சார்ந்து இருப்பவை.

காமன் வெல்த் விளையாட்டுகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடைபெரும். முதலாவது இளையவர்களுக்கான காமன் வெல்த் போட்டிகள் ஸ்காட்லாண்டில் உள்ள எடின்பர்க், நகரத்தில் 2000 ம்ம் ஆண்டு நடைபெற்றது. இரண்டாவது போட்டிகள் 2004 ம்ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது.

இப்போட்டிகளில் பதக்கம் வென்ற சில இந்தியர்கள்: திரிபாதி கிருஷன் நந்து, குலே  சாரதா,  பூனம் ராணி, அர்ஜுன் குமார் இன்னும் பலர்.

இந்தியா பெற்றுள்ள இவ்வெற்றியைப் பற்றி தொலைக்காட்சி நிறுவனங்கள் சரியாக கண்டுக்கொள்ளவே இல்லை. எல்லாரும் கிரிக்கெட் பற்றி மட்டுமே இன்னும் கவனம் செலுத்துகிறார்கள்.

சரி, பதக்கங்கள் பட்டியலை பார்ப்போமா?

Medal Standings Gold Silver Bronze Total
1 India 33 26 17 76
2 Australia 24 19 22 65
3 England 18 9 14 41
4 South Africa 7 14 9 30
5 Canada 6 10 10 26

இதை பற்றி மேலும் அறிய இத்தளத்தை பாருங்கள்.

மின்வெட்டு இவர்களுக்கு ஏன் இல்லை?


ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு சேலத்திற்கு நான் இவ்வாரம் வந்துள்ளேன். நேற்று உள்ளூர் தொலைகாட்சி செய்திகளில் இனிமேல் மின்வெட்டு ஐந்து மணி நேரத்திலிருந்து ஆறரை மணி நேரமாக அதிகரித்துள்ளது என்று அறிவித்ததை கேட்டு எனக்கு அதிர்ச்சி. அதுவும் எங்கள் பகுதியில் காலை ஆறு மணி முதல் பத்து மணி வரை மின்வெட்டு. அலுவகலம் போகும் நேரம் பார்த்து நன்றாகத்தான் மின்வெட்டை அமுல் படுத்தி உள்ளனர். அதே போன்று மாலை நான்கு மணி அளவில் சிறிது நேரம், இரவு பத்து மணிக்கு சிறிது நேரம் என்று மின்வெட்டை சரியாக செயல் படுத்தி வருகின்றனர்.

நேற்று வெளியே வேலை இருந்ததால், அதை முடிக்க ஐந்து ரோடுக்கு செல்ல வேண்டி இருந்தது. அங்கே பார்த்தால் ஒரு கட்சிக் கூட்டம், அதற்கு ஏகப்பட்ட மின்விளக்குகள், ஒலி பெருக்கிகள். சொல்லாமலேயே தெரிந்து இருக்கும், எக்கட்சியின் கூட்டம் என்று. அவனவன் சொந்த காசில் சூனியம் வைத்து கொள்வார்கள், இவர்கள் பொது மக்கள் காசில், வயிற்றெரிச்சலில் சூனியம் வைத்து கொள்கின்றனர்.

இன்று வெளியே செல்ல நேர்ந்தப் போது, இன்னொரு பகுதியில் அதே போன்று கட்சி கூட்டம், அதே போன்று ஏகப்பட்ட மின்விளக்குகள், ஒலி பெருக்கிகள்(அதே கட்சி)

பொது மக்களுக்கு மின்வெட்டை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர். ஆனால் இக்கட்சி கூட்டங்களிற்கு மட்டும் எப்படி தேவையான மின்சாரத்தை விநியோகம் செய்ய முடிகின்றது. இதற்கு ஒரு கட்டுப்பாடு இல்லையா? எக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பாதிக்கப்படுவது நம்மை போன்ற பொது மக்கள் தானே.

இதில் இன்னொரு விடயம் என்னவென்றால் சென்னையை தவிர மற்ற இடங்களில் மின்வெட்டு ஆறரை மணி நேரம், சென்னைக்கு மட்டும் இரண்டு மணி நேரம் போல(எனக்கு இதை பற்றி சரியாகத் தெரிய வில்லை). அது ஏன் தலை நகரத்திற்கு மட்டும் இரண்டு மணி நேர மின்வெட்டு மற்ற ஊர்களுக்கு ஆறரை மணி நேர மின்வெட்டு?