Tag Archives: நையாண்டி

கன்னாப்பின்னாச் செய்திகள்


  • குருவை சாகுபடிக்கு கர்நாடகா தண்ணீர் திறந்து விடவில்லை – ஜெயலலிதா குற்றச்சாட்டு

அதிசயம் ஆனால் உண்மை – மைனாரிட்டி தி.மு.க அரசு இதற்கு பொறுப்பு இல்லையா?

  • உலகத் தமிழ் செம்மொழி மாநாடு – தமிழகமெங்கும் மூன்று நாட்கள் விடுமுறை

எடியூரப்பாவிடம் பேசி கர்நாடகாவில் இருக்கும் தமிழர்களுக்கும் விடுமுறை வாங்கி கொடுக்கலாமே, ஹிஹி!

  • பெண் சிங்கம் – இதை ஏன் உதயநிதி ஸ்டாலின் (ரெட் ஜயன்ட்) அல்லது தயாநிதி அழகிரி (கிளௌட் 9 ) விநியோகிக்க வில்லை?
  • உலகத் தமிழ் செம்மொழி மாநாடு விளம்பரம் சன் டிவியில் வரும் போது, எழுத்து பிழையோடு போடுகின்றனரே? (உலகத் தமிழ செம்மொழி மாநாடு என்று) – மாநாடு முடியும் முன்னர் இதை சரி செய்வார்களா?
  • தமிழ் வழி பொறியியல் பட்டப்படிப்பு அறிமுகம் – இதில் படிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு எப்படி இருக்கும், இவர்கள் வேலை தேடி தமிழ்நாடை விட்டு வெளியே போக முடியுமா?

கேள்வி பதில்கள்


ஒரு மாற்றத்துக்கு கன்னாபின்னாச் செய்திகளை கேள்வி பதில் வடிவில் வழங்குகிறேன்.

ஒவ்வொரு இந்திய குடிமகனு(ளு)க்கும் 30000 ரூபாய் கடனிருப்பதாக சமீபத்தில் படித்ததாக ஒரு நினைவு. அக்கடனை எப்படி தீர்க்கலாம்?
குவார்ட்டர் கோவிந்து, பேக்பைப்பர்புரம்

* இதற்கென்று தனியாக சேவை வரி(Service tax) தனியாக விதிக்கலாம், நம் முன்னாள் நிதியமைச்சர் ப.சி இதில் மிகத் தேர்ந்தவர். (இரண்டு-மூன்று வருடங்களுக்கு முன்பு கல்விக்கென்று ஒரு வரி விதித்தார்களே, அதை வைத்து எ ன்ன செய்தார்கள் என்று யாருக்காவதுத் தெரியுமா?
* பொறுப்பான குடிமகன்(ள்)கள் தாங்கள் கட்ட வேண்டிய வருமான வரியோடு(மற்றும் இன்ன பிற வரிகள்) இக்கடனை அடைக்க தனியாக சிறிது நிதி கொடுக்கலாம். அப்படி கொடுப்பவர்களுக்கு அரசு சில சலுகைகள் கொடுக்கலாம்.
*‌ நிறைய தொலைக்காட்சி அலைவரிசைகள் குறுஞ்செய்தி போட்டிகள் மற்றும் குறுஞ்செய்தி வாழ்த்து செய்திகள் சேவையை (????) செய்து வருகின்றன. அவை ஒவ்வொரு குறுஞ்செய்திக்கும் வசூலிக்கும் பணத்தில் ஒரு பகுதியை இந்த கடன் தீர்க்கும் நிதிக்கு கொடுக்கலாம்.

சேலம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தங்கபாலு பாராளுமன்றத்தில் ஒரு கேள்வி கூட கேக்க வில்லையாமே?
நொந்தகோபால், சேலம்

இவர் மட்டுமல்ல, தமிழகத்தைச் சார்ந்த இந்த எம்.பிக்களும் பொள்ளாச்சி கிருஷ்ணன் (மதிமுக), நாகப்பட்டனம் ஏ.கே.எஸ். விஜயன் (திமுக) மற்றும் வேணுகோபால் (திமுக) ஒரு கேள்வி கூடக் கேட்கவில்லையாம். நீங்களாவது இதைப் பற்றி ஒரு கேள்வி கேட்டீர்களே?

மதிமுகவை அழிக்க கருணாநிதி முயற்சி என்று வைகோ குற்றம் சாற்றியுள்ளாரே?
ராமகிருஷ்ணன், கம்பம்

சில வருடங்களுக்கு முன்பு பா.ம.க வை உடைக்க அ.தி.மு.க முயற்சிப்பதாக பா.ம.க வினர் குற்றம் சாற்றினர். இப்போது என்ன ஆயிற்று? இதைத்தான் நமது தத்துவ(அரசியல்) மேதை கவுண்டமணி “அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா” எ ன்று சொல்லி இருக்கிறார். இதை கண்டுக் கொள்ளாதீர்கள்.

ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் கோபிநாத் தேர்தலில் போட்டியாமே?
விஜய், பெங்களூரு

தேர்தல் பிரச்சாரத்திற்காவது சரியான நேரத்தில் வண்டி கிளம்புமா?

யாருடன் கூட்டணி என்பதைப் பற்றி ஏப்ரல் 1ஆம் தேதி கார்த்திக் அறிவிக்கிறாராமே?
சரத், தூத்துக்குடி

நோ கமெண்ட்ஸ்/ஆன்சர்ஸ்

பாஜக மதவாத கட்சி அல்ல என்று சரத்குமார் கூறியுள்ளாரே!?
கணேசன், சென்னை

தேர்தல் சமயத்தில் இம்மாதிரியான கண்டுபிடிப்புகள் நிகழ்வது சாதராணம். இருந்தாலும் சரத்குமாருக்கு இதற்காக சிறந்த கண்டுபிடிப்பிற்கான பரிசு வழங்கலாம்.

கருணாநிதியை ரம்பா சந்தித்து உள்ளார், அது குறித்து ஏதேனும் தகவல் தர முடியுமா?

மானாட மயிலாட பாகம் நான்கு பற்றி கலந்து ஆலோசித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

அதிமுகவுடன் எந்நாளும் கூட்டு சேர மாட்டோம் என்று பத்திரத்தில் எழுதித் தர தயாராக இருக்கிறேன் என்று ராமதாஸ் சில வருடங்களுக்கு முன்பு கூறினார்?

அட அதை இன்னுமா நினைவு வைத்து இருக்கிறீர்கள்?

அதிமுகவில் மரியாதை கிடைக்கவில்லை என்பதால் திமுகவில் இணைகிறேன் என்று சொல்கிறாரே ராதாரவி?
ராதிகா, சென்னை.

எது எங்கே கிடைக்கும் என்று கூடவா அவருக்கு தெரியவில்லை? இது தெரிந்துக் கொள்வதற்கு அவருக்கு இவ்வளவு வருடங்கள் ஆயிற்றா?

வருண்காந்தி?

பிரகாசமான எதிர்காலம் அவருக்கு இருக்கிறது!?

குறிப்பு:

கேள்வியும் கேள்வி கேட்டவர்களின் பெயரும் கற்பனையே!

நீங்கள் கூட கேள்விகள் கேட்கலாம். ஆனால் கண்டிப்பாக பதில்கள் வரும் என்று சொல்ல இயலாது.

டூபர் வுட் பிலிம்ஸ் வழங்கும் ஸ்கை அண்ட் எர்த்!


சென்னை டூபர் வுட் பிலிம்ஸ் அலுவலகம்

ராமையா கதை கேட்பதற்காக உட்கார்ந்து இருக்கின்றார். அப்போது கதை சொல்வதற்காக வருகிறார் ராஜா.

ராமையா: வாங்க …..
ராஜா: என் பேரு ராஜா சார்
ராமையா: வாங்க ராஜா, என்ன கதை வச்சி இருக்கீங்க
ராஜா: சூப்பர் லவ் ஸ்டோரி சார்
ராமையா: லவ் ஸ்டோரியா? (இது வரைக்கும் லவ் ஸ்டோரி எடுத்து பட்டது பத்தாதா? நெற்றியை கீறி யோசிக்கறார்)
ராஜா: சார், ஹாலிவுட் ரேஞ் லவ் ஸ்டோரி
ராமையா: (ஹாலிவுட் ரேஞ்சா? நிமிர்ந்து உட்கார்கிறார்) சரி சொல்லுங்க பாப்போம்

ராஜா: ராமசாமி டெக்சாஸ் மாநிலத்துல இருக்கற ….
ராமையா ஜெர்க் ஆகிறார்.

ராமையா: என்னது டெக்சாஸா? அது எங்கே இருக்குது?
ராஜா: அமெரிக்கா சார்
ராமையா: எக்கச்சக்கமா செலவு ஆகுமேயா
ராஜா: இல்லை சார், இங்க லோக்கல்ல போய் ஷூட்டிங் எடுக்கறதை விட அமெரிக்காக்கு போய் ஷூட்டிங் எடுத்த செலவு கம்மியா தான் ஆகும்.

ராஜா தொடர்கிறார்
ராஜா: ராமசாமி டெக்சாஸ் மாநிலத்துல இருக்கற வாடர்லூ கிராமத்துல பெரிய நாட்டாமை.
ராமையா: ஆமா அவங்க எப்போ அமெரிக்கா போனாங்க?
ராஜா: ரெண்டாம் உலக போர்ல ராமசாமியோட தாத்தா கலந்துகிட்டாரு. அப்போ அப்படியே அவங்க குடும்பம் அமெரிக்கால செட்டில் ஆயிடிச்சி
ராமையா: ம்ம் இன்டரஸ்டிங், ஆனா அமெரிக்காலயும் நாட்டமையா?
ராஜா: அட கதை தானே சார்.
ராமையா: சரி, மேல சொல்லுங்க

ராஜா கதையை தொடருகிறார்

ராமசாமிக்கு கல்யாணம் ஆயிடிச்சி சார். ராமசாமிக்கு ஒரு தம்பி. அவர் பேரு சக்திவேல். அவரை சுத்தி தான் கதையே நகருது
அந்த கிராமத்துலயே அதிகம் படிச்சவர் சக்திவேலுதான்
அவரு ஒரு நாள் அந்த கிராமத்துல இருக்கற தியேட்டர்க்கு படம் பாக்க அவர் வீட்டு கணக்கு புள்ளையோட போறாரு.
அப்போ படத்துல வர ஹீரோயின பாத்து பாத்தவுடன் காதலுல விழுந்துடறாரு, அந்த பொண்ணு பேரு ஜெனிபர் அனிஸ்டன்
அன்னியில இருந்து அந்த பொண்ணு நியாபகமாவே இருக்காரு. எந்த வேலையும் ஒழுங்கா செய்ய மாட்டேங்கறாரு

ராமையா குறுக்கிட்டு: சக்திவேல் என்ன வேலை செஞ்சிகிட்டு இருக்காரு?
ராஜா: அவரு ஒரு வேலையும் செய்யலைங்க, சும்மாதான் சுத்திகிட்டு இருக்காரு
சக்திவேலு கல்யாணம் கட்டினா அந்த பொண்ணை தான் கட்டுவேன் ஒரு முடிவு எடுக்கறாரு.
அந்த சமயம் பாத்து அவங்க ஊருல ஒரு பிலிம் ஷூட்டிங் நடக்குது. அதுல நடிக்கறது நம்ம சக்திவேலு ஆசை படற ஜெனிபர் அனிஸ்டனே தான்

அந்த பட டைரக்டர் லோகேசன் பாக்கறதுக்கு அந்த கிராமம் முழுசும் சுத்தராறு. அப்போ ராமசாமி பண்ணைய பாத்து ரொம்ப இம்ப்ரஸ் ஆகிடறாரு. அவர் ராமசாமியா சந்திச்சி அவங்க பண்ணைல ஷூட்டிங் நடத்த பெர்மிசன் கேக்கறாரு. ராமசாமி ஒத்துகல

ஆனா சக்திவேலுக்கு அந்த படத்துல நடிக்கறது அவரோட ஆளு ஜெனிபர் அனிஸ்டன் தான்னு தெரிஞ்ச அப்புறம் அவங்க அண்ணாகிட்டே பேசி சம்மதிக்க வச்சிடறார். அப்புறம் அவரு அண்ணிக்கிட்ட ஜெனிபர் அனிஸ்டன விரும்பறதை சொல்லறாரு. அவங்க அண்ணிக்கு ரொம்ப சந்தோசம். ஷூட்டிங் நடக்கறப்போ ஜெனிபர் அனிஸ்டன அவங்க வீட்டு மருமகள் மாதிரியே நடத்துறாங்க. ஆனா ஜெனிபர் அனிஸ்டனுக்கு இது தெரியலை.

படம் ஷூட்டிங் முடிஞ்ச அப்புறம் ஜெனிபர் அனிஸ்டன் அவங்க ஊருக்கே போயிடறாங்க. சக்திவேல் தன்னோட காதலை சொல்லுறதுக்காக ஜெனிபர் அனிஸ்டன் வீட்டுக்கு போயிடறாங்க. தன்னோட காதலை சொல்லுறாரு. ஆனா ஜெனிபர் அனிஸ்டன் அவரோட காதலை ஏத்துக்கலை. அவரை வீட்டை விட்டு துரத்திடறாங்க.

எப்படி சக்திவேல் ஜெனிபர் அனிஸ்டன் மனசை மாத்தி அவரையே கல்யாணம் பண்ணிக்காரு அப்படிங்கறது தான் மீதி கதை சார்.

ராமையா: கதை நல்லா தான் இருக்கு, ஆனா இதை முன்னாடியே பாத்தா மாதிரி இருக்கே?
ராஜா (அவசரமாக): இல்லை சார், இது நான் சொந்தமா யோசிச்ச கதை சார்.

ராமையா: சரியா, இந்த புடி அட்வான்ஸ். படத்தை அடுத்த மாசம் ஆரம்பிச்சிடலாம்
ராஜா: ரொம்ப தேங்க்ஸ் சார்.

பின்குறிப்பு: வழக்கம் போல இது ஒரு கற்பனை பதிவு. சிரிக்க மட்டுமே (சிரிப்பு வந்துச்சா?). புடிச்சி இருந்தா கமெண்டும் ஓட்டும் போடுங்க. புடிக்காட்டி கமெண்ட் போடுங்க

தமிழிஷில் ஒட்டு போட இங்கு க்ளிக்குங்கள்

தமிழ்மணத்தில் ஒட்டு அளிக்க இங்கு க்ளிக்கவும்

பன் டிவி & பன் பிக்சர்ஸ்


பன் டிவிநிலையம்

காட்சி இரண்டு:

பன் மியூசிக் சேனல் அறை

ட்ரிங் ட்ரிங்

திவ்யா: ஹல்லோ நான் தான் திவ்யா பேசறேன், நீங்க யாரு?

தொலைபேசியில் அந்தப்பக்கம்: ஹல்லோ, நான் கடலூருல இருந்து முருகேசன் பேசறேங்க.

திவ்யா: முருகேசன் நல்ல இருக்கீங்களா? உங்க அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கச்சி, மனைவி எல்லாம் நல்ல இருக்காங்களா?

முருகேசன்: எல்லாரும் நல்ல இருக்காங்க மேடம்

திவ்யா: என்னை மேடம்னு கூப்டாதீங்க முருகேசன். என் பேரை சொல்லியே கூப்டுங்க

முருகேசன்: சரி திவ்யா, நல்லா இருக்கீங்களா?

திவ்யா: நான் நல்லா இருக்கேன் முருகேசன், சொல்லுங்க உங்களுக்கு என்ன பாட்டு வேணும்?

முருகேசன்: திவ்யா எனக்கு, “நடுரோட்டில் விழுந்தேன்” படத்துல இருந்து “உன் கிட்னி” பாட்டு வேணுங்க

திவ்யா: சரி முருகேசன், உங்களுக்காக அந்த பாட்டு வந்துகிட்டே இருக்கு.

(அப்பாடல் முடிவடைகிறது)

முருகேசனுக்காக ஒரு அற்புதமான பாட்டு பார்த்தோம். இப்போ அடுத்த காலர் யாருன்னு பாப்போம்.

டிரிங் டிரிங்

திவ்யா: ஹல்லோ நான் திவ்யா பேசறேன், நீங்க யாரு

ராஜேஷ்: ஹலோ திவ்யா நான் தான் ராஜேஷ், பிரம் பெரம்பூர்

திவ்யா:ஹை ராஜேஷ், என்ன ஆச்சி ரொம்ப நாளா ஆளையே காணோம்?

ராஜேஷ்: திவ்யா, ஒரு லாங் டூர் போய் இருந்தேன், அதான்.

திவ்யா: ஒஹ், நல்லா என்ஜாய் செஞ்சீங்களா. சொல்லுங்க உங்களுக்கு என்ன பாட்டு வேணும்?

ராஜேஷ்: எனக்கு படிக்கட்டு படத்துல இருந்து அந்த ரீ-மிக்ஸ் பாடு போடுங்க.

திவ்யா: சரி ராஜேஷ், உங்களுக்காக இப்போ அந்த பாடல் ஒளிப்பரப்புறோம்

இப்படியே இன்னும் பல நேயர்கள் குண்டுக்கல் பாரதி மற்றும் பிடிக்காதவன் படங்களில் இருந்து அவர்களுக்கு பிடித்த பாடல்களை கேட்டு முடிக்கின்றனர்.

நிகழ்ச்சி நிறைவடையும் சமயம் இன்னொரு நேயர் அழைக்கிறார்

திவ்யா: ஹலோ சொல்லுங்க, யார் பேசறது? நான் திவ்யா

மறுமுனை: மேடம் நான் தான் கோபால் பேசறேன்.

திவ்யா: சொல்லுங்க கோபால். நல்லா இருக்கீங்களா?

கோபால்: நல்ல இருக்கேன் திவ்யா.

திவ்யா: ஓகே கோபால், இந்த புரோகிராமோட கடைசி காலர் நீங்க, என்ன பாட்டு வேணும்?

கோபால்: எனக்கு அவுட் லேன்டர் படத்துல இருந்து எதாவது ஒரு பாட்டு போடுங்க

திவ்யா: ?????

திவ்யா: கோபால், நீங்க பேசறது சரியாய் கேக்க மாட்டேங்குது. டிவி வால்யூமை கம்மி பண்ணுங்க

கோபால்: மேடம் நான் டிவி மியூட் பண்ணி தான் வச்சி இருக்கேன்.

திவ்யா: கோபால் நீங்க பேசறது கேக்கலை

கோபால்: ????

(திவ்யா போன் கட் செய்து விடுகிறார்.)

காட்சி ஒன்று:

பன் மியூசிக் சேனல் அறைக்கு பக்கத்து அறை.

டை கட்டி கொண்டிருக்கும் நபர்: சொன்னதெல்லாம் நியாபகம் இருக்கா?

இன்னொருவர்: நியாபகம் இருக்கு சார்.

டை கட்டி கொண்டிருக்கும் நபர்: ஒவ்வொரு தடவையும் பேரு மாத்தணும். வாய்சும் மாத்தணும். சொதப்பக் கூடாது. சரியா?

இன்னொருவர்: சொதப்ப மாட்டேன் சார்.

டை கட்டி கொண்டிருக்கும் நபர்: நம்ம குரூப் தயாரிச்ச எல்லா படத்துல இருந்தும் ஒரு பாட்டு கேக்கணும். ஒவ்வொரு புரோகிராம் ஸ்லாட்டுலயும் நம்ம படங்க பாட்டு ரெண்டாவது வரணும். அப்போதான் ஜனங்க நம்ம படங்கள்/பாட்டுகள் உண்மையிலே நல்லா இருக்குன்னு நெனப்பாங்க. அத வச்சி கொஞ்சம் பேராவது தியேட்டர்க்கு வருவாங்க.

இன்னொருவர்: புரியுது சார்.

டை கட்டி கொண்டிருக்கும் நபர்: (என்னது நான் சொன்னவுடனே புரியுதா? அப்போ இவனை மாத்திட வேண்டியது தான்) சரி, புரோகிராம் இன்னும் பத்து நிமிஷத்துல ஆரம்பிச்சிடும், ரெடியா இரு.

இன்னொருவர்: ஓகே சார்.

குறிப்பு: இக்கதை நான்-லீனியர் முறையில் எழுதப்பட்டது, ஹிஹி.

இது ஒரு கற்பனை பதிவு. சிரிக்க மட்டுமே. பாத்திரங்கள் பெயர் கற்பனையே.

கன்னாபின்னாச் செய்திகள்


ஆஸ்கர் விருதுக்கு ரொக்கப் பரிசு உண்டு என்றால், அதில் ரஹ்மானிற்கு வரி விலக்கு அளிக்க மத்திய நிதியமைச்சகத்துக்கு நான் பரிந்துரை செய்வேன் என்றார். ப.சிதம்பரம்

ஏங்க அவர் வரிவிலக்கு கேட்டாரா? ஒழுங்கா டேக்ஸ் கட்டற எங்களுக்கு எதாவது வரிவிலக்கு கொடுங்களேன்.

தமிழத்தில் அனைத்து கல்லூரிகளும் மூடப்பட்டன
தமிழத்தில் அனைத்து நீதி மன்றங்களும் மூடப்பட்டன

மழலையர் பள்ளியில் ஏற்பட்ட ஒரு பிரச்சினை காரணமாக எல்லா மழலையர் பள்ளிகளும் மூடப்பட்டன

‘ப்ளசண்ட் ஸ்டே’-ஜெ மீதான வழக்கை வாபஸ் பெற்ற திமுக

வரும் தேர்தலில் திமுக அதிமுக கூட்டணி?

ஒரு மாற்றத்திற்கு விஜயகாந்தே கன்னாபின்னாச் செய்தி சொல்லுகிறார்:
அவர் முதலில் சொன்னது
இலங்கைத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வுகாண வலியுறுத்தி, வருகிற தேர்தலைப் புறக்கணிக்க தேமுதிக தயாராக உள்ளது.

அப்புறமாகச் சொன்னது
பதவியைக் காப்பாற்றவே இலங்கைப் பிரச்னைக்கு குரல் கொடுப்பதுபோல அரசியல் கட்சிகள் நடித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற உண்மையிலேயே போராடும் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறனை நான் மதிக்கிறேன்.

கீழே உள்ள இரண்டு செய்திகளிற்கும் சம்பந்தம் உள்ளதா?
ஜெயலலிதா மீதான வழக்கு 20-வது முறையாக ஒத்திவைப்பு
போராடினால்தான் முன்னேற முடியும்: ஜெயலலிதா

மு.க.அழகிரி, கனிமொழி நீங்களும் (அதிமுகவினர்), நானும் பிறக்கவில்லை. பிறந்திருந்தால் அரசியல் பாதை எளிதாக இருந்திருக்கம் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

ஆமாம், அக்கா சொல்லுறது சரிதான் என்று சொல்லுகிறார் சசிகலா

தீவிரவாதிகளின் சொர்க்கபூமி பாகிஸ்தான்: ஒபாமா கடும் கண்டனம்

ரொம்ப புகழாதீங்க – சொல்கிறார் ஜர்தாரி
இன்னும் சில வசதிகள் வேண்டும் என கேட்கின்றனர் தீவிரவாதிகள்

ஒரு நிகழ்வு பல செய்திகள்
நிகழ்வு:  ஆளுநர் உரை
செய்திகள்:
‘செல் அரித்த செல்லாத நோட்டு, செலவழிக்க இயலாத பித்தளை காசு, ஓட்டை விழுந்த தவரக் குவளை, உடைந்து போன மண்பாண்டம் தான் இந்த ஆளுநர் உரை என்று அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் ஜெயலலிதா கருத்து தெரிவித்துள்ளார்.
கேள்வி: ஆளுநர் அறிக்கை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா, அதனை செல்லரித்த செல்லாத நோட்டு, செலவழிக்க இயலாத பித்தளை காசு என்றெல்லாம் வர்ணித்திருக்கிறாரே?
பதில்: அதிலே கூட `நோட்டு’, `காசு’ என்று தான் அவருக்கு நினைப்பு போகிறது. அவரது தரம் தாழ்ந்த வர்ணனையை சில ஏடுகள் வெளியிடாமலே மறைத்து விட்டதை கவனித்திருப்பீர்களே!.

‘தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு மேலும் ஒளியூட்டுவதாக ஆளுநர் உரை அமைந்துள்ளது’ என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.

ஆளுநரின் உரை இன்னொரு ‘கலைஞரின் கடிதம்’ – பாமக நிறுவனர் ராமதாசும்
பொய்கள் நிறைந்த மோசடி அறிக்கை – மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

வேதனைச் செய்தி:
அகமதாபாத் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தில் படித்த எம்.பி.ஏ. மாணவர்கள் (2006 பேட்ச்) ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளார்கள். அதில், “”தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மாணவர்கள் எம்.பி.ஏ. முடித்துவிட்டு வேலைக்குச் செல்லும் போது மற்ற மாணவர்களைவிடக் குறைவாக சம்பளம் வாங்குகிறார்கள்” என்பதைக் கண்டுபிடித்துள்ளார்கள். கல்வி ரீதியாக தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மாணவர்கள் போதிய வசதிகள் பெறாததால் அதிக மதிப்பெண்கள் வாங்க முடிவதில்லை. குறைவாகவே மதிப்பெண்கள் எடுக்கிறார்கள். இதுவே இப்படியொரு சம்பள வித்தியாசத்திற்குக் காரணம் என்கிறதாம் அந்த சர்வே.

பாராட்டப் பட வேண்டியச் செய்தி:
போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மனிதச் சங்கிலி போராட்டம்: பழ.நெடுமாறன்

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட், வேகமான- தொடர்ச்சியான வளர்ச்சியை பிரதிபலிப்பதாக உள்ளது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன
இந்த இடைக்கால பட்ஜெட், தேர்தலை மனதில் கொண்டு மக்களுக்காக போடப்பட்ட பட்ஜெட். இது தேர்தல் மிட்டாய் என்று மத்திய உள்துறை அமைச்சரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

மன்னிக்க வேண்டும் அவசர அவசரமாக டைப் செய்ததில் செய்திகள் மாறி விட்டன. உண்மையானச் செய்திகள்
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட், வேகமான- தொடர்ச்சியான வளர்ச்சியை பிரதிபலிப்பதாக உள்ளது மத்திய உள்துறை அமைச்சரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த இடைக்கால பட்ஜெட், தேர்தலை மனதில் கொண்டு மக்களுக்காக போடப்பட்ட பட்ஜெட். இது தேர்தல் மிட்டாய் என்று என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.