Monthly Archives: ஒக்ரோபர் 2008

உயர்ந்த ஆற்றல்மிகு தொடர் படங்கள் = High dynamic range imaging


நான் சிறிது நாட்களாக புகைப்படக் கலையை கற்றுக் கொண்டு வருகிறேன். நான் முயற்சி பண்ணியவற்றை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளலாமே (உங்களுக்கு வேறு வழியில்லை) என்று இப்பதிவு.

சமீப காலமாகத்தான் நான் PIT (Photography in Tamil பதிவு) படித்து வருகிறேன். அதில் சொல்லி இருந்த HDR தொழில்நுட்பத்தை முயற்சித்து பார்க்க்கலாம் என்று எனது சோனி P73 கேமரா எடுத்து பார்த்தால் அப்பதிவில் சொல்லி இருப்பது போன்று “AEB” வசதி என் கேமராவில் இல்லை. எனினும் தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் (இது அது சரியோட  விக்கிரமாதித்தன் இல்லை) போல கேமராவில் அவ்வசதி இல்லையென்றால் என்ன நாம் முயற்சி செய்து பார்ப்போமென்று நான் செய்த ஆராய்ச்சிதான் இப்பதிவு.

எனக்கு புரிந்த வரை HDR என்றால் என்னவென்றால் ஒவ்வொரு exposure-ல் இருக்கும் சிறப்பு அம்சங்களை (அம்சா இல்லை) ஒன்றாக ஒரே படத்தில் இணைப்பது. தவறாக சொல்லி இருந்தால் திருத்தவும்.

கேமராவில் Programming(P) மோடுக்கு சென்று அதில் exposure -2 என்று அமைத்து முதல் படம் எடுத்தேன். அடுத்து exposure 0 என்று அமைத்து இரண்டாவது படம் எடுத்தேன்.  அடுத்து exposure 2 என்று அமைத்து மூன்றாவது படம் எடுத்தேன். அப்புறம் இதை எல்லாவற்றையும் கிம்பில் (gimp) போட்டு ஒரு கலக்கு கலக்கி ஒரு HDR படம் உருவாக்கினேன்.

உங்கள் பார்வைக்கு எல்லா படங்களும். பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள். இப்படங்கள் எடுப்பதற்கு முக்காலி(tripod) இருந்தால் மிகவும் நல்லது. ஏனென்றால் நீங்கள் எடுக்கும் 3 படங்களும் ஒரே கோணத்தில் மற்றும் நிலையில் இருந்தால் HDR ஆக மாற்றுவது சுலபம். என்னிடம் உள்ள பழைய சோனி P73(4 வருடங்கள்) க்கு எதற்கு முக்காலி வாங்கி செலவு செய்ய வேண்டும் என்று ஒரு யோசனை.

மேலும் விவரங்களுக்கு இத்தளங்களைப் பார்க்கவும்:

Photography-in-tamil
இதைப் பார்த்து தான் HDR என்று ஒரு தொழில் நுட்பம் உள்ளதென்றுத் தெரிந்துக் கொண்டேன்.

Instructables.com
http://www.instructables.com/id/HDR-photos-with-the-GIMP/HDR-photos-with-the-GIMP.pdf
இந்த தளத்தில் HDR படம் எப்படி உருவாக்குவது என்று புட்டு புட்டு வச்சி இருக்காங்க.

“உயர்ந்த ஆற்றல்மிகு தொடர் படங்கள்” என்கின்ற தலைப்பைக் கொடுத்து உதவிய சர்வேசனுக்கு மிக்க நன்றி.

Advertisements

மனிதச்சங்கிலி போராட்டமும் தமிழனின் தகுதியும்


சென்னையில் நடைபெறும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான மனிதச் சங்கிலி போராட்டத்தை பற்றி  புரட்சித் தமிழன் சத்யராஜ் வழக்கம் போல ஆவேசமாக பேசியிருப்பது என்னவென்றால்:

1) சென்னையில் முதல்வர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ள மனிதச் சங்கிலியில் பங்கேற்காத யாரும் தமிழ்நாட்டில் இருக்கவே தகுதியற்றவர்கள்.

2) ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ராமேஸ்வரத்தில் திரையுலகத்தினர் நடத்திய ஊர்வலத்தில் என்னால் பங்கேற்க இயலவில்லை எனது வீட்டில் முக்கிய நிகழ்ச்சி இருந்ததால் என்னால் போக இயலவில்லை.

இவர் சம்பந்தப்பட்ட துறை நடத்திய ஊர்வலத்தில் அவரது வீட்டில் முக்கியமான நிகழ்ச்சி இருந்ததால் இவரால் போக முடிய வில்லையாம். ஆனால் முதல்வர் அழைத்துள்ள மனிதச் சங்கிலியில் பங்கேற்காத எவருக்கும் தமிழகத்தில் இருக்கவே தகுதி இல்லையாம். ஹிஹி, முதல் விஷயத்தையும் இரண்டாம் விஷயத்தையும் படித்து விட்டு இப்படி யாரும் விதண்டா வாதம் செய்யக்கூடாது. அவருடைய வீட்டு பிரச்சினை தான் அவருக்கு முதலில், மற்றவை எல்லாம் அதற்குப்பின்தான். ஆனால் மற்றவர்களுக்கு அப்படி இருக்கக் கூடாது.

புரட்சித் தமிழன் வீட்டில் மனிதச் சங்கிலி நடத்தும் அன்று எந்த ஒரு முக்கியமான நிகழ்ச்சியும் நடக்காது என்றும் நம்புவோமாக. அதே போல் தமிழகத்தில் இருக்க விருப்பப்படுபவர்கள் அனைவரும் அந்நாளன்று வீட்டில் ஏதாவது முக்கியமான நிகழ்ச்சி இருந்தால் அவற்றை வேறு ஒரு நாளுக்குத் தள்ளிப் போட்டு மனிதச் சங்கிலி போராட்டத்தில் கலந்துக் கொள்ளுங்கள்..

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு குரல் கொடுப்பதில் பெரும்பாலானவர்களுக்கு மாற்றுக் கருத்து இருக்காது. ஆனால் இந்த போராட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் மட்டும் தான் ஈழத் தமிழர்களைப் பற்றி கவலைப் படுகிறார்கள் என்றும் கலந்துக் கொள்ளாதவர்கள் தமிழத்தில் இருப்பதற்கே தகுதி இல்லாதவர்கள் என்றும் சொல்லவதில் என்ன நியாயம் இருக்கிறதென்று எனக்குத் தெரியவில்லை.

சத்தியராஜ் ஒரு புரட்சித்தமிழன், எனவே அவர் ராமேஸ்வரம் போராட்டத்தில் அவரது வீட்டு நிகழ்ச்சியினால் கலந்துக் கொள்ள முடியாததால் எந்த பிரச்சினையயும் இல்லை. அதைப் பற்றி எந்த கருத்து கந்தசாமியும் கருத்தும் கூறவில்லை. இதே நிலைமையில் மற்றவர்கள் இருந்திருந்து அவர்கள் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல், சத்யராஜ் கலந்துக் கொண்டிருந்தால் அன்றைக்கு மேடை அமர்க்களப்பட்டிருக்கும். இதை எல்லாம் பார்க்கும் போது இவர்கள் எதற்காக போராடுகிறோம் என்பதை விட, யாரை குறிவைத்துத் தாக்கலாம் என்பதிலேயே கவனமாக இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

மின்சார சமாச்சாரம்


தமிழக அரசு(மின் துறை) சில நாட்களுக்கு முன்பு மின்சார விநியோகம் சம்பந்தமாக சில விஷயங்களை அறிவித்தது (அதைப் பற்றி ஒரு பதிவு போட்டு, என்னுடைய பதிவு எண்ணிக்கையை ++ செய்யவே இப்பதிவு):

1)தனியார் நடத்தும் விழாக்களுக்கு(ஆலயத் திருவிழாக்கள் நீங்கலாக) ஆடம்பர விளக்குகள் பயன்படுத்தும் பொழுது மின்சார வாரியத்திடம் இருந்து மின்சாரம் வழங்கப்படமாட்டாது.

இது கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டங்களுக்கும் பொருந்தும் என்றே நினைக்கின்றேன். இந்த திட்டத்தை சில மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்து இருக்கலாம். இதை எல்லா கட்சி கூட்டங்களுக்கும் கடுமையாக அமுல்படுத்தவேண்டும். (இதை  தே மு தி க பொதுக்கூட்டம் அறிவித்த போதே அமுல்படுத்தி இருந்தால் நிறைய மின்சாரம் சேமித்து இருக்கலாமே, ஹிஹி)

2) நகர்புறப் பகுதிகளில் வீட்டு இணைப்புகளுக்கு தினந்தோறும் குறைந்தபட்சம் 20 மணி நேரம் மின்சாரம் வழங்கப்படுவது உறுதி செய்யப்படுமாம்.

குறைந்தபட்சம் 20 மணி நேரம் என்று சொல்லி இருக்கிறார்கள் (நல்ல வேலை உஷாராக அதிகபட்சம் என்று சொல்ல வில்லை), அதை அமுல்படுத்தியும் உள்ளார்கள். பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான் (??)

3) சில நிறுவனங்களுக்கிற்கு, தொழிற்சாலைகளிற்கு, அலுவலகங்களிற்கு மின்வெட்டிலிருந்து  விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

4) வீட்டு இணைப்புகளில் அதிகமாக மின்சாரம் உபயோகிப்போருக்கு 50% அதிகமாக கட்டணம் விதிக்கப்படும்.

இதற்கு பொதுமக்களிடமிருந்து கிடைத்த ஆதரவைப் பார்த்து இவ்வுத்தரவை ரத்து செய்து விட்டார்கள்.

இதை பற்றி, விஜயகாந்த் என்ன சொல்கிறார்? இந்த மின்வெட்டு பிரச்சினையை சமாளிக்க அவரிடம்  யோசனை இருக்கிறதாம். அதை சொன்னால் கருணாநிதி அதை செயற்படுத்தி விடுவார் என்பதால் அதை இப்போது சொல்ல மாட்டாராம்.  அடப்பாவிகளா, உங்கள் யோசனையை யார் செயல்படுத்தினால் என்ன, மக்கள் பயன்பெறுவார்களே, உங்களுக்கும்(விஜயகாந்திற்கு) பெயர் கிடைக்குமே? (நன்றி சிம்பிள் சுந்தர்!)

சரி மக்களே, அதை எல்லாம் விட்டுடுவோம். தமிழத்தில் தலைவிரித்தாடும் இந்த மின்வெட்டு பிரச்னைக்கு என்ன காரணம்(ங்கள்) என்பதை யாரவது தெரியப்படுத்தலாமே?

இளையவர்களுக்கான காமன்வெல்த் விளையாட்டுகள் – இந்தியா முன்னிலை


புனேயில் இளையவர்களுக்கான மூன்றாவது காமன் வெல்த் விளையாட்டுகள் நடைபெற்று வருவது அனைவருக்கு தெரிந்ததே(என்னது தெரியாதா, அதான் இப்போது தெரிந்து விட்டேதே 🙂 ). இப்போட்டிகளில் இந்தியா பதக்கங்களில் முதலில் உள்ளது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

காமன் வெல்த் நாடுகள் என்பவை 53 நாடுகளை உள்ளடக்கியவை. இவை பெரும்பாலும் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இருந்தவை மற்றும் இங்கிலாந்தை சார்ந்து இருப்பவை.

காமன் வெல்த் விளையாட்டுகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடைபெரும். முதலாவது இளையவர்களுக்கான காமன் வெல்த் போட்டிகள் ஸ்காட்லாண்டில் உள்ள எடின்பர்க், நகரத்தில் 2000 ம்ம் ஆண்டு நடைபெற்றது. இரண்டாவது போட்டிகள் 2004 ம்ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது.

இப்போட்டிகளில் பதக்கம் வென்ற சில இந்தியர்கள்: திரிபாதி கிருஷன் நந்து, குலே  சாரதா,  பூனம் ராணி, அர்ஜுன் குமார் இன்னும் பலர்.

இந்தியா பெற்றுள்ள இவ்வெற்றியைப் பற்றி தொலைக்காட்சி நிறுவனங்கள் சரியாக கண்டுக்கொள்ளவே இல்லை. எல்லாரும் கிரிக்கெட் பற்றி மட்டுமே இன்னும் கவனம் செலுத்துகிறார்கள்.

சரி, பதக்கங்கள் பட்டியலை பார்ப்போமா?

Medal Standings Gold Silver Bronze Total
1 India 33 26 17 76
2 Australia 24 19 22 65
3 England 18 9 14 41
4 South Africa 7 14 9 30
5 Canada 6 10 10 26

இதை பற்றி மேலும் அறிய இத்தளத்தை பாருங்கள்.

சினிமா சினிமா – தொடர் பதிவு


என்னை இத்தொடர் பதிவில் கோர்த்து விட்ட அணிமாவிற்கு என் முதற்க்கண் நன்றியை தெரிவித்துக் கொண்டு பதிவிற்குப் போகலாமா? (அணிமா ஸ்டைல்)

1.அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?

அடடா, எவ்வயதில் முதல் சினிமா பார்த்தேன் என்பது எனக்கு நினைவு இல்லையே. அப்பொழுதே வலைப்பதிவு வசதி இருந்திருந்தால் நான் அதை பதிவு செய்திருப்பேன். இப்பொழுது உபயோகமாக இருந்திருக்கும். ஆகையால் வலைப்பதிவு, இணையம் போன்றவற்றை அப்போது கண்டு பிடிக்காததற்கு என்னுடைய கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆ. நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?

மெய்யாலுமே இதற்கும் என்னிடம் பதில் இல்லை.

இ. என்ன உணர்ந்தீர்கள்?

என்னத்த உணர்ந்து இருப்பேன். எப்படா வீட்டுக்கு போகலாம் என்று இருக்குமோ?

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

தலைவரின் குசேலன்.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

பொதுவாக நான் தமிழ் படங்களை திரையரங்கில் தான் பார்ப்பது வழக்கம். ஆனால் உன்னாலே உன்னாலே திரைப்படத்தை திருட்டு டிவிடியில் பார்த்தேன். படம் ஒகேவாகத்தான் இருந்தது. ஒளிப்பதிவிற்காகவும் திரைக்கதையில் சிறிது வித்தியாசம் காட்டியதற்கும் ஜீவாவிற்கு ஒரு சல்யூட்.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

பாதித்த படங்கள் நிறைய இருக்கின்றன:
நீ வருவாயென – பார்த்திபன் நடித்த படம் ஆயிற்றே என்று பார்த்து பாதிப்படைந்த படம்
வரலாறு (காட் பாதர்) – நன்றாக இருக்கிறது என்று விமரிசனம் செய்யப்பட்ட படத்தை பார்த்து அடைந்த பாதிப்பு இருக்கிறதே
கண்ணுக்குள் நிலவு – பார்த்து கடுப்பு ஆனது ஒரு கதை
மோனிஷா என் மோனலிசா – காரணங்கள் சொல்ல வேண்டுமா? இதற்கு பிறகு T.R. படங்கள் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை.
அடடா, தருமபுரியை விட்டுட்டேனே!

(கேள்வியை சரியாக புரிந்துக் கொண்டேன் தானே?)
5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

சொல்லிக்கற மாதிரி ஒன்னும் இல்லை

ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்

தொழில் நுட்பம் முன்னேறியதால் எப்படங்கள், பாடல்கள் எங்கிருந்து சுடப்பட்டவை என்று நமக்கு தெரிய வந்துள்ளது என்னை பாதித்துள்ளது .(கேள்வியை சரியாக புரிந்துக் கொண்டேன் தானே?)

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

முன்பு விகடன், குமுதம் படித்துக் கொண்டிருந்தேன். இப்போதில்லை. இருந்தாலும் வலையுலகிலும் சினிமா தவிர்க்க முடியாத ஒன்று. எனவே தமிழ் சினிமா பற்றி வாசிக்காமல் இருக்கமுடியாது.

7.தமிழ்ச்சினிமா இசை?

நிச்சயம் பெருமை படலாம்.மலையாளம், தெலுங்கு, கன்னட மற்றும் ஹிந்தி பேசுபவர்களும் விரும்பி கேக்கும் அளவுக்கு தமிழ் இசை உள்ளது. பெரும்பாலானவர்களை போல இளையராஜா இசை பிடிக்கும். எ.ஆர்.ரஹ்மான் இசை பிடிக்கும்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

பொதுவாக வேறு இந்திய மொழி படங்கள் பார்ப்பதில்லை. எக்கச்சக்கமாக ஹாலிவுட் படங்கள் பார்ப்பேன் (அது புரிகிறதோ இல்லையோ).
ஹாஸ்டல், சா(1,2), பேதாலஜி . அதுவும் ஹாஸ்டல், பேதாலஜி  படங்கள் முழுதாக பார்க்க முடியவே இல்லை.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

மறைமுகத் தொடர்பு உள்ளது. தமிழ் படங்களை பார்ப்பதன் மூலமாக. அதை மீண்டும் செய்வேன். இதை செய்வதால் தமிழ்ச்சினிமா மேம்படும் என்று நினைக்கின்றேன்.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மசாலா மற்றும் நல்ல படங்கள் வந்துக் கொண்டேதான் இருக்கும்.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

அப்படி நடந்தால் பாவம். தொலைக்காட்சி நிறுவனங்கள், பத்திரிக்கைகள் என்ன செய்யும்? நான் ஹாலிவுட் படங்களை வைத்து ஒப்பேற்றிக் கொள்வேன். தமிழர்களுக்கு தான் மிகவும் கடினமாக இருக்கும்.

இப்பொழுது நான் சிலரை கோர்த்து விட வேண்டும்.

நண்பர் அடலேறு
சேலத்து சிங்கம் இங்கிலிஷ்காரன் (அப்பாடா பட்டத்தை ட்ரான்ஸ்பர் பண்ணியாச்சி)
அன்பர் கல்யாண்
நண்பர் கிரி (கிரி இந்த தடவை சரியாக தொடர் பதிவு போட்டு விடுங்கள்)
மதிப்பிற்குரிய அருண்

மின்வெட்டு இவர்களுக்கு ஏன் இல்லை?


ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு சேலத்திற்கு நான் இவ்வாரம் வந்துள்ளேன். நேற்று உள்ளூர் தொலைகாட்சி செய்திகளில் இனிமேல் மின்வெட்டு ஐந்து மணி நேரத்திலிருந்து ஆறரை மணி நேரமாக அதிகரித்துள்ளது என்று அறிவித்ததை கேட்டு எனக்கு அதிர்ச்சி. அதுவும் எங்கள் பகுதியில் காலை ஆறு மணி முதல் பத்து மணி வரை மின்வெட்டு. அலுவகலம் போகும் நேரம் பார்த்து நன்றாகத்தான் மின்வெட்டை அமுல் படுத்தி உள்ளனர். அதே போன்று மாலை நான்கு மணி அளவில் சிறிது நேரம், இரவு பத்து மணிக்கு சிறிது நேரம் என்று மின்வெட்டை சரியாக செயல் படுத்தி வருகின்றனர்.

நேற்று வெளியே வேலை இருந்ததால், அதை முடிக்க ஐந்து ரோடுக்கு செல்ல வேண்டி இருந்தது. அங்கே பார்த்தால் ஒரு கட்சிக் கூட்டம், அதற்கு ஏகப்பட்ட மின்விளக்குகள், ஒலி பெருக்கிகள். சொல்லாமலேயே தெரிந்து இருக்கும், எக்கட்சியின் கூட்டம் என்று. அவனவன் சொந்த காசில் சூனியம் வைத்து கொள்வார்கள், இவர்கள் பொது மக்கள் காசில், வயிற்றெரிச்சலில் சூனியம் வைத்து கொள்கின்றனர்.

இன்று வெளியே செல்ல நேர்ந்தப் போது, இன்னொரு பகுதியில் அதே போன்று கட்சி கூட்டம், அதே போன்று ஏகப்பட்ட மின்விளக்குகள், ஒலி பெருக்கிகள்(அதே கட்சி)

பொது மக்களுக்கு மின்வெட்டை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர். ஆனால் இக்கட்சி கூட்டங்களிற்கு மட்டும் எப்படி தேவையான மின்சாரத்தை விநியோகம் செய்ய முடிகின்றது. இதற்கு ஒரு கட்டுப்பாடு இல்லையா? எக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பாதிக்கப்படுவது நம்மை போன்ற பொது மக்கள் தானே.

இதில் இன்னொரு விடயம் என்னவென்றால் சென்னையை தவிர மற்ற இடங்களில் மின்வெட்டு ஆறரை மணி நேரம், சென்னைக்கு மட்டும் இரண்டு மணி நேரம் போல(எனக்கு இதை பற்றி சரியாகத் தெரிய வில்லை). அது ஏன் தலை நகரத்திற்கு மட்டும் இரண்டு மணி நேர மின்வெட்டு மற்ற ஊர்களுக்கு ஆறரை மணி நேர மின்வெட்டு?

காதலில் விழுந்தேன் குடும்ப பிரச்சினை


காதலில் விழுந்தேன் படத்தை மதுரை ராமநாதபுரம் ஏரியாவில் திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் ஆளும் கட்சி மற்றும் சிலர் இப்படம் வெளியாவதை விரும்பவில்லையென்றும் பரபரப்பாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நேரமிது.

அந்த படம் எப்படி இருக்கிறதென்றுத் தெரியவில்லை. ஆனால் சன் நிறுவனம் அதனுடைய எல்லா அலைவரிசைகளிலும் இப்படத்திற்கு 5 நிமிடங்களுக்கொரு தடவை விளம்பரம் செய்து வருகிறது. அளவிற்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பது போல இது அளவுக்கு மீறிய விளம்பரமாகவே தோன்றுகிறது.

இப்படத்திற்காக பல்லாயிரகணக்கான ரசிகர்கள் காத்திருப்பதாகவும் இப்படம் சில இடங்களில் திரையிடப்படாததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்திருப்பதாகவும் வேறு செய்திகள் வெளியாகின்றன( கவுண்டமணி பாஷையில் அடங்கொண்ணியா!).

இவர்கள் குடும்ப விவகாரத்தை விட்டால் தமிழகத்தின் பிரச்சினையாக்கி விடுவார்கள் போல இருக்கிறது. இவர்கள் ஆட்சியிலிருந்தால் இவர்கள் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை மட்டுமே பார்க்க வேண்டுமென்றும் இவர்களுக்கு பிடிக்காதவர்கள் செய்வதற்கெல்லாம் எதிராக செயல்படுவதும் சரியல்ல. சன் நிர்வாகமோ தான் நினைத்தை செய்தே தீருவேன் மற்றும் ஏகாதிபத்திய நிறுவனமாக தான் திகழ வேண்டுமென்றும் என்றும் நினைத்துக் கொண்டுள்ளது. ஏற்கனவே சன் நிறுவனம் நகைச்சுவைக்கென்றே தனி அலைவரிசை ஒன்றை ஆரம்பித்து அதை சன் டீடிஎச்சில் மட்டுமே பார்க்க முடியும் என்றும் சொல்கிறது (வடிவேல் பாஷையில் என்ன ஒரு வில்லத்தனம்!).

ஒரு நிறுவனம் எல்லாத்துறைகளிலும் நன்றாக வளரட்டும். ஆனால் அவ்வளர்ச்சியை வைத்துக் கொண்டு என் வழியாகத்தான் எல்லாமே செய்ய வேண்டுமென்று சொல்வது நியாயமல்ல. டாடா நிறுவனம் எல்லாத்துறைகளிலும் கால் பதித்துள்ளது. அதற்கு உலகளாவிய அளவில் நல்லப் பெயரும் உள்ளது. ஆனால் டாடா நிறுவனம் மேல் இப்படி ஒரு ஏகாதிபத்திய குற்றச்சாட்டு இல்லை. இப்பேர்பட்ட டாடா நிறுவனத்தின் டீடிஎச்க்கு சிலர் தொந்தரவுகள் கொடுத்தனர் என்றும் செய்தி எப்போதோ வந்தது. ஆனால் அப்போது ஒரே குடும்பமாக இருந்ததால் இப்பிரச்சினை பிரச்சினையாகவே மாறவில்லை. இனிமேல் சில குடும்பங்கள்‌ நினைக்கும் படம் தான் தமிழகத்தில் வெளியாக முடியும் மற்றும் சில குடும்பங்கள் வெளியிடும் செய்திகளைத்தான் தமிழக மக்கள் நம்ப வேண்டும் என்ற நிலை உருவானால் கூட ஆச்சரியமில்லை.