Tag Archives: அரசியல்

மக்களவை தேர்தல் 2009 – திரை விமரிசனம்


உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடிக்கும் அதிரடி ஆக்ஸன் படம் தேர்தல் 2009, டிரைலர் இதோ:

வயதானாலும் சளைக்காத கருணாநிதி மற்றும் ஜெயலலிதா போட்டிபோட்டு நடித்துள்ள படம் தான் இது. கூடவே ஜால்ரா அடிக்கும் வேடங்களில் வைகோ, திருமாவளவன், இராமதாஸ், மொத்த காங்கிரஸ் கட்சியினர், மற்றும் இன்னும் பலர் நடிக்கின்றனர்.

இவ்வளவு வருடங்களாக இலங்கை தமிழர்களா அப்படி ஒரு இனம் இருக்கின்றதா என்று கேட்டு வந்த ஜெயலலிதா தற்போது தனி ஈழம் அமைக்க பாடுபடுவேன் என்று தேர்தல் வாக்குறுதி கொடுக்கிறார்.

ஆறு மாதங்கள் மேலாக இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் மெத்தனமாக இருந்து விட்டு தேர்தல் சமயம் தீடீர் என்று ஒரு அவசர உண்ணாவிரதம் (அதை காலை சாப்பாடு சாப்பிடா விரதம் என்றும் சொல்லலாம்) இருந்து நானும் இருக்கிறேன் என்று காட்டிக்கொள்ளும் கருணாநிதி.

இப்படி பல பர்ஃபார்மன்ஸ் கேரக்டர்களில் இருவரும் பின்னி பெடலெடுத்து நடித்துள்ளனர்.

நாளைக்கு இப்படம் வெளியாகிறது. படத்தின் ரிஸல்ட் இன்னும் நான்கு நாட்களில் தெரிந்து விடும்.

படத்தின் ரிஸல்ட்டைப் பொறுத்து படத்தில் அருமையாக நடித்தவர்களுக்கு மார்க்கெட் வேல்யூ அதிகமாகும். நடிகர்களுக்குள் கூட்டணி மாறும்.

எது எப்படியோ நீங்கள் நாளை மறக்காமல் இப்படத்தை பார்த்து விடுங்கள். இல்லையென்றால் உங்கள் சீட்டை வைத்து வேறு யாராவது இப்படத்தை பார்த்து விடுவார்கள்.

நாளைக்கு வாக்கு சாவடியில் ஓட்டுப் போடுங்கள். அப்படியே இங்கேயும் ஓட்டு போடுங்களேன்.

தமிழிஷில் ஒட்டு போட இங்கு க்ளிக்குங்கள்

கேள்வி பதில்கள்


ஒரு மாற்றத்துக்கு கன்னாபின்னாச் செய்திகளை கேள்வி பதில் வடிவில் வழங்குகிறேன்.

ஒவ்வொரு இந்திய குடிமகனு(ளு)க்கும் 30000 ரூபாய் கடனிருப்பதாக சமீபத்தில் படித்ததாக ஒரு நினைவு. அக்கடனை எப்படி தீர்க்கலாம்?
குவார்ட்டர் கோவிந்து, பேக்பைப்பர்புரம்

* இதற்கென்று தனியாக சேவை வரி(Service tax) தனியாக விதிக்கலாம், நம் முன்னாள் நிதியமைச்சர் ப.சி இதில் மிகத் தேர்ந்தவர். (இரண்டு-மூன்று வருடங்களுக்கு முன்பு கல்விக்கென்று ஒரு வரி விதித்தார்களே, அதை வைத்து எ ன்ன செய்தார்கள் என்று யாருக்காவதுத் தெரியுமா?
* பொறுப்பான குடிமகன்(ள்)கள் தாங்கள் கட்ட வேண்டிய வருமான வரியோடு(மற்றும் இன்ன பிற வரிகள்) இக்கடனை அடைக்க தனியாக சிறிது நிதி கொடுக்கலாம். அப்படி கொடுப்பவர்களுக்கு அரசு சில சலுகைகள் கொடுக்கலாம்.
*‌ நிறைய தொலைக்காட்சி அலைவரிசைகள் குறுஞ்செய்தி போட்டிகள் மற்றும் குறுஞ்செய்தி வாழ்த்து செய்திகள் சேவையை (????) செய்து வருகின்றன. அவை ஒவ்வொரு குறுஞ்செய்திக்கும் வசூலிக்கும் பணத்தில் ஒரு பகுதியை இந்த கடன் தீர்க்கும் நிதிக்கு கொடுக்கலாம்.

சேலம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தங்கபாலு பாராளுமன்றத்தில் ஒரு கேள்வி கூட கேக்க வில்லையாமே?
நொந்தகோபால், சேலம்

இவர் மட்டுமல்ல, தமிழகத்தைச் சார்ந்த இந்த எம்.பிக்களும் பொள்ளாச்சி கிருஷ்ணன் (மதிமுக), நாகப்பட்டனம் ஏ.கே.எஸ். விஜயன் (திமுக) மற்றும் வேணுகோபால் (திமுக) ஒரு கேள்வி கூடக் கேட்கவில்லையாம். நீங்களாவது இதைப் பற்றி ஒரு கேள்வி கேட்டீர்களே?

மதிமுகவை அழிக்க கருணாநிதி முயற்சி என்று வைகோ குற்றம் சாற்றியுள்ளாரே?
ராமகிருஷ்ணன், கம்பம்

சில வருடங்களுக்கு முன்பு பா.ம.க வை உடைக்க அ.தி.மு.க முயற்சிப்பதாக பா.ம.க வினர் குற்றம் சாற்றினர். இப்போது என்ன ஆயிற்று? இதைத்தான் நமது தத்துவ(அரசியல்) மேதை கவுண்டமணி “அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா” எ ன்று சொல்லி இருக்கிறார். இதை கண்டுக் கொள்ளாதீர்கள்.

ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் கோபிநாத் தேர்தலில் போட்டியாமே?
விஜய், பெங்களூரு

தேர்தல் பிரச்சாரத்திற்காவது சரியான நேரத்தில் வண்டி கிளம்புமா?

யாருடன் கூட்டணி என்பதைப் பற்றி ஏப்ரல் 1ஆம் தேதி கார்த்திக் அறிவிக்கிறாராமே?
சரத், தூத்துக்குடி

நோ கமெண்ட்ஸ்/ஆன்சர்ஸ்

பாஜக மதவாத கட்சி அல்ல என்று சரத்குமார் கூறியுள்ளாரே!?
கணேசன், சென்னை

தேர்தல் சமயத்தில் இம்மாதிரியான கண்டுபிடிப்புகள் நிகழ்வது சாதராணம். இருந்தாலும் சரத்குமாருக்கு இதற்காக சிறந்த கண்டுபிடிப்பிற்கான பரிசு வழங்கலாம்.

கருணாநிதியை ரம்பா சந்தித்து உள்ளார், அது குறித்து ஏதேனும் தகவல் தர முடியுமா?

மானாட மயிலாட பாகம் நான்கு பற்றி கலந்து ஆலோசித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

அதிமுகவுடன் எந்நாளும் கூட்டு சேர மாட்டோம் என்று பத்திரத்தில் எழுதித் தர தயாராக இருக்கிறேன் என்று ராமதாஸ் சில வருடங்களுக்கு முன்பு கூறினார்?

அட அதை இன்னுமா நினைவு வைத்து இருக்கிறீர்கள்?

அதிமுகவில் மரியாதை கிடைக்கவில்லை என்பதால் திமுகவில் இணைகிறேன் என்று சொல்கிறாரே ராதாரவி?
ராதிகா, சென்னை.

எது எங்கே கிடைக்கும் என்று கூடவா அவருக்கு தெரியவில்லை? இது தெரிந்துக் கொள்வதற்கு அவருக்கு இவ்வளவு வருடங்கள் ஆயிற்றா?

வருண்காந்தி?

பிரகாசமான எதிர்காலம் அவருக்கு இருக்கிறது!?

குறிப்பு:

கேள்வியும் கேள்வி கேட்டவர்களின் பெயரும் கற்பனையே!

நீங்கள் கூட கேள்விகள் கேட்கலாம். ஆனால் கண்டிப்பாக பதில்கள் வரும் என்று சொல்ல இயலாது.

பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை மிக அவசிய தேவையா?


தமிழக அரசு கன்னடக் கவிஞர் சர்வக்னரின் சிலையை சென்னையில் நிறுவ முடிவு செய்துள்ளது. பெங்களூரில் திருவள்ளுவர் சிலையை நிறுவுவதற்கு கர்நாடக முதல்வர் எட்டியூரப்பா  சம்மதித்துள்ளதாக தமிழக சட்டசபையில் நிதியமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள கன்னட பாலகா சங்க வளாகத்தில் கவிஞர் சர்வக்னர் சிலை வைப்பதற்கு சென்னை மாநகராட்சி முன்பே அனுமதி வழங்கி விட்டது. அதே போலே பல வருடங்களாக நிறுவப்படாமல் இருக்கும் திருவள்ளுவர் சிலையை நிறுவுவதற்கு கர்நாடக அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக இப்பொழுது ஒரு தகவல் பரவியுள்ளது

தமிழகத்தில் வாழும் கன்னடர்கள் மற்றும் கர்நாடகத்தில் வாழும் தமிழர்களின் நீண்டகால கனவு நிறைவேறும். மாநிலத்துக்கு மாநிலம் இதுபோன்று நல்லுறவு தழைத்து செழிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் விருப்பம் நோக்கம் என்று சொல்லி இருக்கிறாராம் அமைச்சர் அன்பழகன்.

அந்த கன்னட கவிஞர் சர்வக்னர் யாரென்றே நமக்குத் தெரியாது. அவருடைய சிலையை சென்னையில் நிறுவப் போகிறார்களாம். அதே போன்று திருவள்ளுவர் என்றால் யார் என்றே பெரும்பாலான கன்னடர்களுக்கும் தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை.இம்மாதிரி நிலையில் திருவள்ளுவர் சிலையை பெங்களூருவில் நிறுவினால் எதாவது ஒரு சின்ன பிரச்சினைக்கு கூட கண்டிப்பாக அந்த சிலையைத் தான் பதம் பார்ப்பார்கள் விஷமிகள். அதை கேள்விப்பட்டவுடன் நம்மவர்களும் சற்றும் சளைக்காதவர்களாக சர்வக்னர் சிலையை பதம் பார்ப்பார்கள். பிரச்சினை பெரியதாகும். இரண்டு மாநிலங்களிற்கு இடையே ஏகப்பட்ட பிரச்சினைகள் உள்ளப்போது இன்னொரு பிரச்சினையை புதிதாக உருவாக்க வேண்டுமா?

எப்படி இப்படி பன்னீர் செல்வம் ஐயா?


(முன்னால் முதல்வர்) பன்னீர் செல்வம் நேற்று சட்டசபையில் அவருடைய கட்சி(அதிமுக) தலைமைக்கு மாற்றான கருத்தை இலங்கை தமிழர்கள் விஷயத்தில் பேசி உள்ளார். அதிமுக தலைமை ஈழ பிரச்சினையில் என்ன சொல்லி இருக்கிறதென்றால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரே இலங்கையில் நடைப் பெற்று வருவதாகவும் விடுதலைப் புலிகள் அப்பாவி ஈழத் தமிழர்களை மனித கேடயமாக உபயோகித்தும் வருகிறது. ஆனால் நேற்று சட்டசபையில் பேசிய பன்னீர் செல்வம் ஈழத்தில் அப்பாவி தமிழர்களை இலங்கை இராணுவம் கொன்று வருவதாகவும் இதற்கு மாண்புமிகு முதலமைச்சர் கருணாநிதி தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

எனவே கலைஞர் தொலைக்காட்சி இன்றைய செய்திகளில் பன்னீர் செல்வம் கட்சி தலைமைக்கு எதிராக/முரணாகப் பேசி இருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளதாக ஒரு பரபரப்பை கிளப்பி உள்ளது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்: முதலில் கலைஞர்  தொலைக்காட்சியில் சொன்னதுப் போல பன்னீர் செல்வம்  கட்சி தலைமைக்கு முரணாகப் பேசி இருந்தால் அது அதிசயத்திலும் அதிசயமே.

இரண்டாவது விஷயம் அவர் பேச்சில் கட்சி மரபை மறுபடி மீறி உள்ளார். அவர் எப்படி கலைஞரை மாண்புமிகு முதல்வர் என்று சொல்லி இருக்கலாம்? மைனாரிடி அரசை நடத்தி வரும் கருணாநிதி என்றுத்தானே சொல்லி இருக்க வேண்டும்?

பின் குறிப்பு: பன்னீர் செல்வம் சட்டசபையில் பேசியப்போது அவர் பின் எஸ்.வி.சேகர் உட்கார்ந்து இருப்பதை காட்டினர்.

மின்வெட்டு இவர்களுக்கு ஏன் இல்லை?


ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு சேலத்திற்கு நான் இவ்வாரம் வந்துள்ளேன். நேற்று உள்ளூர் தொலைகாட்சி செய்திகளில் இனிமேல் மின்வெட்டு ஐந்து மணி நேரத்திலிருந்து ஆறரை மணி நேரமாக அதிகரித்துள்ளது என்று அறிவித்ததை கேட்டு எனக்கு அதிர்ச்சி. அதுவும் எங்கள் பகுதியில் காலை ஆறு மணி முதல் பத்து மணி வரை மின்வெட்டு. அலுவகலம் போகும் நேரம் பார்த்து நன்றாகத்தான் மின்வெட்டை அமுல் படுத்தி உள்ளனர். அதே போன்று மாலை நான்கு மணி அளவில் சிறிது நேரம், இரவு பத்து மணிக்கு சிறிது நேரம் என்று மின்வெட்டை சரியாக செயல் படுத்தி வருகின்றனர்.

நேற்று வெளியே வேலை இருந்ததால், அதை முடிக்க ஐந்து ரோடுக்கு செல்ல வேண்டி இருந்தது. அங்கே பார்த்தால் ஒரு கட்சிக் கூட்டம், அதற்கு ஏகப்பட்ட மின்விளக்குகள், ஒலி பெருக்கிகள். சொல்லாமலேயே தெரிந்து இருக்கும், எக்கட்சியின் கூட்டம் என்று. அவனவன் சொந்த காசில் சூனியம் வைத்து கொள்வார்கள், இவர்கள் பொது மக்கள் காசில், வயிற்றெரிச்சலில் சூனியம் வைத்து கொள்கின்றனர்.

இன்று வெளியே செல்ல நேர்ந்தப் போது, இன்னொரு பகுதியில் அதே போன்று கட்சி கூட்டம், அதே போன்று ஏகப்பட்ட மின்விளக்குகள், ஒலி பெருக்கிகள்(அதே கட்சி)

பொது மக்களுக்கு மின்வெட்டை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர். ஆனால் இக்கட்சி கூட்டங்களிற்கு மட்டும் எப்படி தேவையான மின்சாரத்தை விநியோகம் செய்ய முடிகின்றது. இதற்கு ஒரு கட்டுப்பாடு இல்லையா? எக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பாதிக்கப்படுவது நம்மை போன்ற பொது மக்கள் தானே.

இதில் இன்னொரு விடயம் என்னவென்றால் சென்னையை தவிர மற்ற இடங்களில் மின்வெட்டு ஆறரை மணி நேரம், சென்னைக்கு மட்டும் இரண்டு மணி நேரம் போல(எனக்கு இதை பற்றி சரியாகத் தெரிய வில்லை). அது ஏன் தலை நகரத்திற்கு மட்டும் இரண்டு மணி நேர மின்வெட்டு மற்ற ஊர்களுக்கு ஆறரை மணி நேர மின்வெட்டு?